

காண்டாமிருகத்தின் கொம்பு, தங்கம் மற்றும் வைரத்தைவிட மதிப்பு மிக்கது என்பதால் அதை வேட்டையாடுவது அதிகரித்து, அந்த இனமே அருகி வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் ஓரேகான் மாகாண பல்கலைக்கழத்தின் உயிரின வாழ்க்கையை ஆராய்தல் பிரிவு பேராசிரியர் வில்லியம் ரிப்பில் தலைமையிலான குழுவி னர் ஓர் ஆய்வு நடத்தினர். அதன் விவரம்.
யானை, காண்டாமிருகம், நீர் யானை மற்றும் கொரில்லா உள்ளிட்ட 74 வகையான உலகின் மிகப்பெரிய தாவர உண்ணி விலங்குகள் (100 கிலோவுக்கு மேற்பட்ட எடையுள்ள) அருகி வருவதற்கான காரணம் குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.
இதுகுறித்து பேராசிரியர் வில்லியம் ரிப்பில் கூறும்போது, “யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளின் பாகங்கள் நுகர்பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிப்பதற் காக பயன்படுகின்றன. இதனால் அதிக வருமானம் கிடைப்பதால் இந்த வகை விலங்குகளை வேட்டையாடுவது அதிகரித்து, அவை அருகி வருகின்றன. குறிப்பாக, காண்டாமிருகத்தின் கொம்பு, தங்கம், வைரம், போதைப் பொருட்களைவிட மதிப்புமிக்கது” என்றார்.
சர்வதேச அளவில் கடந்த 2002 முதல் 2011-ம் ஆண்டுக்குள் யானைகள் 62 சதவீதமாகக் குறைந்துள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2010 மற்றும் 2012-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வேட்டையாடப்பட்டன. இது உலகில் காணப்படும் சவன்னா யானைகளின் எண்ணிக்கையில் 5-ல் ஒரு பகுதி ஆகும்.
2007-ம் ஆண்டு வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை வெறும் 13 ஆக இருந்தது. அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் காண்டாமிருகங்களை வேட்டையாடப்படுவது அதிவேகமாக அதிகரித்து, 2013-ம் ஆண்டில் 1,004 ஆக அதிகரித்திருந்தது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் சவான்னா யானைகளும் 20 ஆண்டுகளில் ஆப்பிரிக்க காண்டாமிருகங்களும் முற்றிலும் அழிந்துவிட வாய்ப்புள் ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.