Last Updated : 28 May, 2015 05:45 PM

 

Published : 28 May 2015 05:45 PM
Last Updated : 28 May 2015 05:45 PM

இராக் திக்ரித் பகுதியில் புதைகுழிகளிலிருந்து 470 சடலங்கள் மீட்பு

இராக் திக்ரித் பகுதியிலிருந்த மர்ம புதைகுழிகளிலிருந்து 470 சடலங்களை தோண்டி எடுத்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பலகுழிகளிலிருந்து சடலங்கள் வந்தவண்ணம் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2014-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஷியா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோரைக் கடத்திச் சென்றனர்.

இவர்கள் பல இடங்களில் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது அந்த அமைப்பின் வீடியோ வெளியீட்டில் தெரியவந்தது.

பின்னர் சில பிணங்களை டைக்ரிஸ் நதியில் விட்டெறிந்தும் சிலரை அவசரம் அவசரமாக புதைத்து விட்டும் சென்றுள்ளனர். இப்போது அரசப் படைகள் திக்ரித் பகுதியை கைப்பற்றியதையடுத்து பிணக்குழிகளை தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகின் மிக மோசமான அராஜகத் தாக்குதல் என்று ஐ.எஸ்.-இன் இச்செயல்களை கண்டித்துள்ள ஊடகங்கள் இந்த படுகொலையில் மட்டும் 1,700 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கின்றன.

இது குறித்து பாக்தாத் தலைமை மருத்துவர் கூறும்போது, “இந்தப் பிணங்கள் 4 புதையிடங்களிலிருந்து வந்துள்ளன. இதில் ஒரு புதையிடம் மிகப்பெரியது. இதில் 400 பிணங்கள் கிடந்துள்ளன.

தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள் மீதான தடயவியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐ.எஸ். படைகள் அப்போது நிகழ்த்திய இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர்கள் தங்கள் மகன்கள், தந்தைமார்கள், சகோதரர்களை இழந்துள்ளனர். இப்போது இந்த சடலங்களில் இவர்களுடையது எது என்று அடையாளம் காணப்படவுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் முதல் பெயர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x