

ஆசிய அளவில் 40 வயதுக்குட்பட்ட பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை ‘வெல்த் – எக்ஸ்’ நேற்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் இளம் தொழிலதிபர் அருண் புதூர் முதலிடம் பிடித்துள்ளார்.
‘செல்பிரேம்’ என்ற மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளரும் தலைவருமான அருண் (37), சென்னையில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்தவர். தற்போது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் இவரது சொத்து மதிப்பு 400 கோடி டாலராக உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25 ஆயிரத்து 580 கோடி ஆகும்.
அருண் பட்டப்படிப்புக்கு பிறகு 1998-ம் ஆண்டு செல்பிரேம் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது மிகப் பிரபல ‘வோர்டு புராஸஸர்’ மென்பொருளை உற்பத்தி செய்கிறது.
மென்பொருள் நிறுவனம் தவிர கனிமச் சுரங்கம், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் அருண் புதூர் தனது கவனத்தை திருப்பி சாதனை படைத்து வருகிறார்.
அருணுக்கு அடுத்தபடியாக சீனாவைச் சேர்ந்த ஜோ யாஹுயி 220 கோடி டாலர் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் உள்ள முதல் 10 பேரில் சீனாவைச் சேர்ந்த 6 பேரும், ஜப்பானைச் சேர்ந்த மூவரும் உள்ளனர்.