

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.1 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை, 1 யுவான் சீன கரன்சி (இந்திய மதிப்பு ரூ.10) கட்டுகளைக் கொடுத்து வாங்கி உள்ளார். இந்தத் தகவல் படங்களுடன் சமூக இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
சீனாவில் ஒரு பெண் உணவுப்பொருள் சில்லறை விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சொகுசு கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது இவரது கனவு. இந்தக் கனவு நனவாகும் வரை மிகவும் குறைவான மதிப்பு கொண்ட 1 யுவான் கரன்சி நோட்டுகளை சேகரிக்க முடிவு செய்தார். அதன்படி சேகரித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் பிஎம்டபிள்யூ 730 லி காரை வாங்கி உள்ளார். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சத்து 3 ஆயிரத்து 802. இதற்காக தான் சேர்த்து வைத்திருந்த 1 யுவான் கரன்சி கட்டுகளை கார் விநியோகஸ்தரிடம் வழங்கி உள்ளார். மீதம் உள்ள தொகையை தனது கிரடிட் கார்டு மூலம் செலுத்தி உள்ளார்.
இதுகுறித்து கார் விநியோக நிறுவனத்தின் பொது மேலாளர் லி மோரன் கூறும்போது, “ஒரு பெண் சுமார் 100 கிலோ எடை கொண்ட யுவான் கரன்சி நோட்டுகளைக் கொடுத்து பிஎம்டபிள்யூ கார் வாங்கி உள்ளார். அதை எங்கள் நிறுவன ஊழியர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
குறைந்த மதிப்பிலான கரன்சி நோட்டுகளை மலைபோல பெற்றுக்கொண்டு சொகுசு காரை நாங்கள் விற்பனை செய்தது இதுதான் முதன்முறை” என்றார்.