

ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி பரிதவித்து வருகின்றனர்.
ஏமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் சன்னி பிரிவை சேர்ந்த அந்த நாட்டு அதிபர் மன்சூர் ஹதி படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
தலைநகர் சனா உட்பட பெரும்பான்மையான பகுதிகள் கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் மன்சூர் ஹதி தற்போது சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக போர் தொடுத்தன. அதன்படி கடந்த ஐந்து வாரங்களுக்கும் மேலாக ஏமன் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் இதுவரை 1000 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர். துறைமுக நகரான ஏடனில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருவதால் ஏமன் முழுவதும் உணவுப் பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. சுமார் 2.5 கோடி பேர் போரின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். லட்சக்கணக்கானோர் உணவின்றி தவித்து வருகின்றனர் என்று பிரிட்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள், எரிபொருள் தட்டுப்பாட்டால் நிவாரணப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
ஹவுத்தி கிளர்ச்சிப் படைகளுக்கு ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரான் அரசு ஆதரவு அளித்து வருகிறது. அந்த நாட்டில் இருந்து விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதை தடுக்கும் வகையில் ஏமனின் இரண்டு விமான நிலையங்களை சவுதி அரேபிய கூட்டுப் படைகள் குண்டுகளை வீசி அழித்துவிட்டன.
இதனால் ஏமன் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எந்த நேரமும் குண்டுமழை பொழிவதால் பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன.
பெட்ரோல் நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இதேநிலை நீடித்தால் ஏமன் மக்கள் தொகை பாதிக்குப் பாதியாக குறைந்து விடும் என்று மனித உரிமை அமைப்புகள் கவலையுடன் தெரிவித்துள்ளன.