

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய ராணுவத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று நேபாள கம்யூனிஸ்ட்டுகள் சிலர் கூறி வருகின்றனர்.
நிலநடுக்கத்துக்குப் பிறகு நேபாளத்தில் பல நாடுகளும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் அந்நாட்டுப் பிரதமர் சுஷில் கொய்ராலா அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.
அதில் கலந்து கொண்ட யூ.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல், சி.பி.என்.(மாவோயிஸ்ட்) மோகன் பைதியா மற்றும் மஜ்தூர் கிஸான் கட்சியின் தலைவர் நாராயண் மன் பிஜுக்சே ஆகிய மூன்று கம்யூனிஸ்ட்டுத் தலைவர்கள் இந்தியாவின் உதவியால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.
இந்தக் கூட்டத்தில் அவர்கள் கூறியதாவது:
நிவாரணப் பணிகள் என்ற போர்வையில் இந்திய ராணுவம் நடந்துகொள்ளும் முறை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை, நேபாள அரசின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்கிறது. மேலும் அவற்றின் நடவடிக்கைகள் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதாகவும் இல்லை. என்ன மாதிரியான வெளிநாட்டு உதவிகளை நாம் பெறலாம் என்பது குறித்து அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வரையறுக்க வேண்டும்.
இந்திய ராணுவத்தினர் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மற்றும் நேபாள-சீன எல்லையின் வடக்குப் பகுதி ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகின்றன. இதனால் சீனாவுடனான நமது நட்புக்கு பங்கம் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊடகங்கள் வழியாக இந்த விமர்சனம் எழுந்தவுடன், நேபாள அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இந்தியா நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறது என்று காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.