Published : 16 May 2015 11:00 AM
Last Updated : 16 May 2015 11:00 AM

உலக மசாலா: தங்கப் புதையல் புத்தகம்!

நியு மெக்ஸிகோவைச் சேர்ந்தவர் ஃபாரஸ்ட் ஃபென். பழங்காலப் பொருட்களையும் ஓவியங்களையும் சேகரிப்பது இவருடைய தொழில். மிகப் பெரிய கோடீஸ்வரர். சாகசங்கள் என்றால் இவருக்கு விருப்பம் அதிகம்.

1988-ல் சிறுநீரகத்தில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய வாழ்நாள் அதிகக் காலம் நீடிக்காது என்று நினைத்த ஃபென், ஒரு பெட்டியில் தங்க நாணயங்கள், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களைப் போட்டு மூடினார்.

புதையல் வேட்டை என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ள குறிப்புகளை வைத்து, ராக்கி மலையில் தங்கப் புதையலைப் புதைத்துவிட்டார். ஒவ்வோர் ஆண்டும் ’புதையல் வேட்டை’ போட்டியை நடத்துகிறார். சென்ற ஆண்டு 30 ஆயிரம் பேர் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.

ஆனால் ஒருவராலும் புதையலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தங்கப் புதையலின் இன்றைய மதிப்பு சுமார் 12.5 கோடி ரூபாய். ’’புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைச் சரியாக வரிசைப்படுத்தினாலே புதையலைக் கண்டுபிடித்துவிடலாம்’’ என்கிறார் ஃபென்.

சுவாரசியமான மனிதர்!

உலகின் முதல் ‘ஹலோ கிட்டி’ சீன உணவு விடுதி ஹாங்காங்கில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பான ஹலோ கிட்டி கதாபாத்திரத்தை சீனர்கள் அதிகம் விரும்புகின்றனர். மேன் க்வாங் என்பவர் இந்தப் பிரத்யேக உணவு விடுதியை உருவாக்கியிருக்கிறார். இங்கே தயாராகும் உணவுகள் அனைத்தும் ஹலோ கிட்டி வடிவத்திலேயே பரிமாறப்படுகின்றன. உணவின் மீது ஹலோ கிட்டி படத்தை வரைவதற்கு இயற்கையான வண்ணங்கள்பயன்படுத்தப்படுகின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் இந்த உணவுகள் கவர்ந்து இழுக்கின்றன. உணவு விடுதியின் கண்ணாடி, மேஜை, நாற்காலி, உணவு பரிமாறப்படும் பாத்திரங்கள், தேநீர் குவளைகள், ஒளிரும் விளக்குகள், சுவர் அலங்காரங்கள் என்று எங்கு திரும்பினாலும் ஹலோ கிட்டியின் படங்கள்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் ஒவ்வொரு மேஜையிலும் பெரிய ஹலோ கிட்டி பொம்மை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. ஹலோ கிட்டி உணவகத்தில் சாப்பிடுவதற்கு மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

ஆஹா… நாவில் நீர் ஊறுகிறது…

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆரோன் ரோஸ் செல்லப் பிராணியாக மலைப் பாம்பு ஒன்றை வளர்த்து வந்தார். வின்ஸ்டன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பாம்புக்கு உணவாக எலியைக் கொடுக்கும்போது, உலோக இடுக்கியை அப்படியே மறந்து வைத்துவிட்டார். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் இடுக்கியை விழுங்கிவிட்டிருந்தது பாம்பு.

தன்னுடைய செல்லப் பிராணியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அடிலெய்ட் பல்கலைக்கழக வனவிலங்கு மருத்துவரிடம் எடுத்துச் சென்றார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் உடலுக்குள் இடுக்கி இருப்பது உறுதியானது. பைதானின் உள் உறுப்புகள் பாதிக்காத வண்ணம் அறுவை சிகிச்சை செய்து, இடுக்கியை வெளியே எடுத்தார் மருத்துவர் ஆலிவர் ஃபன்னெல். ஒரு வாரத்தில் நன்றாகக் குணமடைந்துவிட்டது வின்ஸ்டன்.

அப்படி ஒரு பசியா!

பிரிட்டனில் வசிக்கும் நைஜெல் பூலே தன்னுடைய மூக்கை 50 கோடி ரூபாய்க்குக் காப்பீடு செய்திருக்கிறார். பிரிட்டனின் மிகப் புகழ்பெற்ற பாலாடைக்கட்டித் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் நைஜெல், 18 ஆண்டுகளாக இங்கே பணிபுரிகிறார். பாலாடைக்கட்டியின் வாசனையை வைத்தே சரியான பதத்தில் இருக்கிறதா, எவ்வளவு நாட்கள் ஆன பாலாடைக்கட்டி, தரம் குறைந்திருக்கிறதா போன்ற விஷயங்களை எல்லாம் கண்டுபிடித்துவிடுவார்.

ஒருநாளைக்கு 6 ஆயிரம் கிலோ பாலாடைக்கட்டி இங்கே தயாரிக்கப்படுகிறது. 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பூலே நுகர்ந்து பார்ப்பதோடு, ஒரு நாளைக்கு ½ கிலோ பாலாடைக்கட்டியைச் சுவைத்துப் பார்க்கவும் செய்கிறார். 69 வயது பூலேவின் மூக்கு திடீரென்று நுகரும் சக்தியை இழந்து வருகிறது. பூலே அளவுக்கு நுகர்வதில் நிபுணராக இருக்கும் ஒருவரை நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது.

நல்ல வேலையாகத் தெரியுதே…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x