

வங்கதேசத்தில் அனந்த பிஜோய் தாஸ் என்ற மதச்சார்பற்ற எழுத்தாளரை, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலைச் செய்தனர்.
அனந்த பிஜோய் தாஸ் என்ற எழுத்தாளர் வங்கதேசத்தின் சில்ஹெத் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கும்பலாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்ததாக அந்த நகரத்தின் துணைக் காவல் ஆணையர் ஃபைசல் முகமது தெரிவித்தார்.
வங்கதேசத்தில் மதச்சார்பற்ற எழுத்தாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இது மூன்றாவதுச் சம்பவம் ஆகும்.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவைச் சேர்ந்த அவிஜித் ராய் (44) என்ற வலைப்பதிவாளர் புத்தக வெளியீட்டு விழாவுக்காக வங்கதேசம் சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு கொள்கைகள் குறித்து எழுதிய வலைப்பதிவர் வாசிகுர் ரஹ்மான் (27) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
தற்போது படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர் பிஜோய் தாஸ், வங்கதேச வலைப்பதிவர்கள் சங்கத்தின் தலைவர் ஆவார். மறைந்த எழுத்தாளர் அவிஜித் ராயின் 'முக்த் - மோனா' என்ற வலைப்பதிவு தளத்திலும் எழுதிவந்தார்.
இதனிடையே அவிஜித் ராய் படுகொலைக்கு அல் - காய்தா அமைப்பு கடந்த மாதத்தில் பொறுப்பேற்றதும் இது குறித்து விசாரிக்க அமெரிக்கா முன்வந்ததும் குறிப்பிடத்தக்கது.