

ஒசாமா பின் லேடன் குறித்த ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டு வருகிறது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒசாமா பின் லேடனின் மனநிலை இந்த ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.
மும்பையில் நடத்திய 26/11 தாக்குதலை “ஆசிர்வதிக்கப்பட்ட நடவடிக்கை” என்று பின் லேடன் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும், “அது ஒரு சாகசத் தாக்குதல். இந்திய பொருளாதாரத் தலைநகர் தகர்க்கப்பட்டது, பல மேற்கத்தியர்களும் அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர்” என்று கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவர் அமெரிக்க தாக்குதல் மற்றும் கண்காணிப்பு குறித்து கடும் பீதியில் இருந்ததும் தெரியவந்துள்ளது. ட்ரோன் தாக்குதல் குறித்து பின் லேடன் தனது சகாக்களிடையே கவலைகளையும், அச்சங்களையும் பகிர்ந்து கொண்ட ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “அமெரிக்க மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளைக் கொல்வதில் கவனம் இருக்க வேண்டும். ட்ரோன் தாக்குதல் பல ஜிஹாதிக்களை பலி வாங்கியுள்ளது. இந்த ஒன்றுதான் நமக்கு கவலை அளிக்கிறது, நம் ஆதாரங்களை அழிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
அல் கய்தாவுக்கு புதிதாக ஆள் சேர்க்க படிவம் ஒன்றும் கையாளப்பட்டதாக இந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, புதிதாக இயக்கத்தில் சேர்பவர்களிடம், “தேவையான தகவல்களை துல்லியமாகவும் உண்மையாகவும் குறிப்பிடவும், தெளிவாக புரியும் படி எழுதவும், பெயர், வயது, திருமண விவரம், தற்கொலை தாக்குதல் நடத்த தயாரா? நீங்கள் தியாகிவிட்டால் நீங்கள் சார்ந்த யாரை நாங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்?” போன்ற விவரங்களை கோரும் படிவமே நடைமுறையில் இருந்ததாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.