பாகிஸ்தான் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 47 பேர் பலி

பாகிஸ்தான் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 47 பேர் பலி
Updated on
1 min read

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஷியா பிரிவு மக்களை குறிவைத்து பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 47 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்திருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சஃபூரா சவுக் அருகே சென்று கொண்டிருந்த பேருந்து மீது இரு சக்கர வாகனங்களில் வந்து இறங்கிய 8 பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் பேருந்தினுள் நுழைந்த அவர்கள் கண்மூடித்தனமாக பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், அப்பாவி பொதுமக்கள் 47 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

பேருந்தில் 60-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக சிந்து மாகாண காவல்துறை அதிகாரி குலாம் ஹைதர் ஜமாலி தெரிவித்தார். துப்பாக்கி ஏந்திய 8 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கராச்சி நகரின் காவல் கண்காணிப்பாளர் நஜீப் கானும், பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 41 பேர் கொல்லப்பட்டதாக உறுதி செய்துள்ளார். தாக்குதல் நடந்த பகுதி ஷியா பிரிவு மக்கள் அதிகம் வாழும் இடமாகும். ஷியா பிரிவின் இஸ்மாயிலி சமுகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக கருதப்படுகிறது.

சம்பவ பகுதியை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இதுபோன்ற வகையிலான தாக்குதல்களில் பாகிஸ்தான் தாலிபான் மற்றும் லஷ்கர்-இ-ஜாங்வி வழக்கமாக ஈடுபடுவார்கள் என்பதால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in