3 மாதங்களாக நடுக்கடலில் தவித்த வங்கதேச அகதிகள்

3 மாதங்களாக நடுக்கடலில் தவித்த வங்கதேச அகதிகள்
Updated on
1 min read

வேலை தேடி வெளிநாட்டுக்கு செல்ல முயன்று 3 மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்த வங்கதேசம் மற்றும் மியான்மரைச் சேர்ந்த அகதிகள் 300க்கும் மேற்பட்டோர் தாய்லாந்து கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். எந்தவித முறையான ஆவணங்கள் இல்லாமல் இதுபோல நூற்றுக்கணக்கானோர் அடிக்கடி செல்கின்றனர். வேலை வாங்கித்தருவதாகக் கூறி தரகர்களும் இவர்களை பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லாமல் இவர்களை கூட்டிச் செல்கின்றனர். சில நேரங்களில் இவர்களை சிறைபிடித்து உறவினர்களிடம் பணம் பெற்று அவர்களை விடுவிக்கும் சோகமும் நடக்கிறது. பணம் கிடைக்காவிட்டால் மலேசியா போன்ற நாடுகளில் பண்ணைகளில் அகதிகளை விற்றுவிடுகின்றனர்.

இந்நிலையில், இதேபோன்று வங்கதேசம் மற்றும் மியான்மரை சேர்ந்த 300 பேர் பிழைப்பு தேடி தாய்லாந்துக்கு மோட்டார் படகு ஒன்றில் புறப்பட்டனர். அவர்களை தரகர்கள் அழைத்து சென்றதாக தெரிகிறது. முறையான ஆவணங்கள் இன்றி பிழைப்பு தேடி வரும் அவர்களை நாடுகள் ஏற்பதில்லை. பல நாடுகளின் கடற்படையினர் அவர்களை விரட்டிவிடுகின்றனர். தரகர்கள் அழைத்துச் செல்லும் அகதிகளுக்கு சரியான உணவும் அளிக்கப்படுவதில்லை. அந்த படகின் இன்ஜினின் சில பாகங்களும் பழுதானதால் நடுக்கடலில் அகதிகள் தத்தளித்தனர்.

அகதிகளின் படகு கடலில் தத்தளிப்பதை அறிந்த தாய்லாந்து கடற்படையினர் அவர்களை மீட்டு உணவளித்தனர். படகின் இன்ஜினும் சரி செய்யப்பட்டது. படகு தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், அந்த படகு சில தரகர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் அவர்கள் படகில் இருந்தவர்களின் எதிர்ப்பையும் மீறி மலேசியா செல்ல வற்புறுத்தியதாகவும் அதிகாரிகள் கூறினர். படகில் இருந்த பெண்கள் சிலர் கதறி அழுததாகவும் தெரிவித்தனர். இருந்தாலும் அவர்களை தங்கள் நாட்டில் ஏற்க முடியாது என்பதால் திருப்பி அனுப்பி விட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்த ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதத்தில் மட்டும் வங்கதேசம் மற்றும் மியான்மரைச் சேர்ந்த அகதிகள் 25,000 பேர் பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்கு படகுகள் மூலம் வங்கக் கடலில் சென்றுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in