Published : 19 May 2015 10:46 AM
Last Updated : 19 May 2015 10:46 AM

உலக மசாலா: நாய் காதல்!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஜாஸ்மினுக்கும் ஜாஸ்பருக்கும் மிக ஆடம்பரமாகத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. பக் இன நாய்களான ஜாஸ்மினும் ஜாஸ்பரும் கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். ஜாஸ்மினின் திருமண ஆடை ஒண்ணே கால் லட்சம் ரூபாய். இந்தத் திருமணத்துக்கு 300 பேர் வந்திருந்தனர்.

மனிதர்களின் திருமணங்களைப் போலவே இந்தத் திருமணத்திலும் திருமண கேக் வெட்டப்பட்டது. விருந்தும் நடைபெற்றது. திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தங்களின் செல்லப்பிராணிகளுக்கு அலங்காரமான ஆடைகளை அணிவித்து அழைத்து வந்திருந்தனர்.

திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருட்கள், நன்கொடைகள் அனைத்தும் விக்டோரியா நாய்கள் பாதுகாப்பு அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் மூலம் மீட்கப்பட்ட ஜோடிகள்தான் ஜாஸ்மினும் ஜாஸ்பரும்.

என்னதான் காரணம் சொன்னாலும் நாய்களுக்குத் திருமணம் என்பதெல்லாம் டூ மச்…

சீனாவின் பெய்ஜிங்கில் வசிக்கும் டு ஸின் தன்னுடைய பெயரை குந்தர் என்று மாற்றிக் கொண்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு டு ஸின் காதலில் தோல்வியடைந்தார். ஒவ்வொரு நாளும் கண்ணீருடன் கழிந்தது. அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர், அமெரிக்க நகைச்சுவைத் தொடர் ஒன்றைப் பார்க்கும்படி பரிந்துரைத்தார். தொடரைப் பார்க்கப் பார்க்க டு ஸின்னுக்குப் பிடித்துப் போய்விட்டது.

அவருடைய துன்பமும் கரைந்து போயிருந்தது. உடனே அந்தத் தொடரில் வருவதைப் போலவே நிஜ வாழ்க்கையில் ஏதாவது செய்து, காதல் தோல்வியடைந்தவர்களின் வாழ்க்கையை மீட்க வேண்டும், காதலர்களுக்கு காதலின் ஆழத்தைப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தார். தொடரில் வருவது போலவே தன்னுடைய குடியிருப்பை ’காபி ஷாப்’ ஆக மாற்றினார்.

இங்கே வருபவர்களின் மனநிலை மாறும் அளவுக்கு ஜாலியான புத்தகங்கள், நகைச்சுவைத் தொடர், பாடல் டிவிடிகள் போன்றவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வைத்தார். இவை தவிர டு ஸின்னின் நண்பர்கள் 6 பேர் ஒருவருக்கு ஒருவர் அன்புடனும் காதலுடனும் எப்படி வாழ்வது என்று வகுப்புகள் எடுக்கின்றனர். இந்தத் தலைமுறையினருக்கு நான் செய்யக்கூடிய மிகப் பெரிய கடமையாக இதைக் கருதுகிறேன். இங்கே வருபவர்கள் தங்கள் துன்பங்களை மறந்து, புதிய வாழ்க்கைக்குத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். என் மனைவி மற்றும் நண்பர்களால்தான் இந்தக் காரியம் சாத்தியமாகியிருக்கிறது என்கிறார் டு ஸின்.

நீங்களும் மீண்டு, மற்றவர்களையும் மீட்கும் உங்கள் பணிக்கு வாழ்த்துகள் டு ஸின்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கிறார்கள் 16 வயது எலிஜா வில்லியம்ஸ் மற்றும் மேரி காஸ்டென். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். மேரியின் அப்பா காவல்துறையில் உயர் அதிகாரி. விரைவில் மேரியின் குடும்பம் வேறோர் இடத்துக்குச் செல்ல இருக்கிறது. தன் திருமணக் கோரிக்கையை எப்படி வைக்கலாம் என்று யோசித்தார் வில்லியம்ஸ்.

இறுதியில் காவல்துறை பாணியிலேயே சொல்லிவிடுவது என்று தீர்மானித்தார். ஆட்கள் நடமாடத ஒரு சாலையில் மஞ்சள் வண்ண டேப்பை ஒட்டி, இது தடை செய்யப்பட்ட பகுதி என்று காட்டினார். பிறகு காருக்கு அருகில் மனித உருவத்தை வரைந்தார். அந்த உருவத்துக்குள் படுத்துவிட்டார்.

பார்ப்பதற்கு விபத்தில் ஒரு மனிதன் இறந்து கிடக்கும்போது, காவலர்கள் அந்த இடத்தை எப்படி வைத்திருப்பார்களோ, அப்படியே உருவாக்கியிருந்தார் வில்லியம்ஸ். ’நான் இறந்துகொண்டிருக்கிறேன்… உன்னுடன் வாழ விரும்புகிறேன்’ என்றும் எழுதி வைத்திருந்தார். காதலனின் வித்தியாசமான யோசனை மேரிக்குப் பிடித்துவிட்டது. வில்லியம்ஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

வித்தியாசம் காட்ட வேண்டியதுதான்… அதுக்காக இப்படியா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x