

எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற அமெரிக்க மருத்துவர் இயன் குரோசியர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டார்.
செப்டம்பர் 2014-ம் ஆண்டு, இந்த அமெரிக்க மருத்துவர் உலக சுகாதார மையத்துடன் இணைந்து எபோலா பாதித்த சியரா லியோனில் பணியாற்றி வந்த போது இவரையும் எபோலா தொற்றியது கண்டறியப்பட்டது.
இவர் உடனடியாக அட்லாண்டாவில் உள்ள எபோலா சிகிச்சை சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். ஆனால் அக்டோபர் மாதம் வரையில் இவரது ரத்தத்தில் எபோலா வைரஸ் இருப்பது கண்டறியப்பட முடியவில்லை. இதனையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால், 2 மாதங்களுக்குப் பிறகு இயன் குரோசியரின் இடது கண்ணில் கடும் அழற்சியும், அதி ரத்த அழுத்தமும் ஏற்பட்டது. இதனால் கண் வீங்கி, பார்வைப் பிரச்சினைகளும் தோன்றின. உடனடியாக இவர் முன்பு சிகிச்சை எடுத்துக் கொண்ட அதே மருத்துவமனைக்குத் திரும்பினார்.
அங்கு கண் நோய் மருத்துவர் டாக்டர் ஸ்டீவன் யே என்பவர் கண்ணிலிருந்து திரவத்தை நீக்கி அதனை எபோலா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பினார். அந்த திரவத்தில் எபோலா வைரஸ் குடிகொண்டிருப்பது தெரியவந்ததையடுத்து இவரும், கண் நோய் மருத்துவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கண்ணீரிலோ, கண்ணைச் சுற்றியுள்ள திசுவிலோ எபோலா வைரஸ் இல்லை.
இதனையடுத்து எபோலா வைரஸ் இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தவர்கள், அல்லது அந்த நோயிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களை நெருக்கமாக பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எபோலா இல்லை என்று பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்ட 2 மாதங்களுக்குப் பிறகு கண் திரவத்தில் எபோலா ஒளிந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது மருத்துவ உலகில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
எபோலா வைரஸினால் கண்ணுக்குள் அழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பார்வைக் கோளாறுகள் தோன்றியதோடு இடது விழி நீல நிறத்திலிருந்து பச்சை நிறமாக மாறியுள்ளது.
ஏற்கெனவே, ரத்தத்திலிருந்து எபோலா வைரஸை விரட்டினாலும், விந்துவில் பல மாதங்களுக்கு எபோலா தங்கக்கூடியது என்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ல நிலையில் தற்போது கண்ணுக்குள் ஒளிந்து கொள்ளும் எபோலா பற்றிய இந்த அனுபவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எபோலா வைரஸுக்கு இது வரை 11,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலகச் சுகாதார மையம் இந்த வாரத்தில் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.