Last Updated : 20 May, 2015 10:23 AM

 

Published : 20 May 2015 10:23 AM
Last Updated : 20 May 2015 10:23 AM

ஆசிய நாடுகள் ஒற்றுமையாக செயல்படுவது அவசியம்: சியோல் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஆசிய நாடுகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும் இரண்டு முகங்களைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

நம்மிடையே ஒற்றுமை இல்லா விட்டால் ஆசியா மீண்டும் பின்னுக்குத் தள்ளப்படும். என்று எச்சரிக்கை விடுத்துள்ள மோடி, தீவிரவாதம் உள்ளிட்ட சவால்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இதுதொடர்பான முயற்சியில் இந்தியா தனது பொறுப்பை உணர்ந்து செயல்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

மூன்று நாடுகள் பயணத்தின் இறுதியாக, தென்கொரியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, சியோல் நகரில் நடைபெற்ற ஆசிய தலைவர் கள் மாநாட்டில் பேசியதாவது:

ஆசியா நாடுகள் வளர வேண்டு மென்றால், பிராந்திய பிரிவு தொடர் பாக இனி ஒருபோதும் சிந்திக்கக் கூடாது. ஆசிய நாடுகள் நீடித்த வளர்ச்சி அடையவும், அனைவரை யும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்பட வும் நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

ஆசியா நாடுகளுக்குள் பகைமை உணர்வு தொடர்ந்தால் நாம் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்படு வோம். அதே நேரம் நாம் ஒற்றுமை யாக செயல்பட்டால் உலகையே வடிவமைக்க முடியும்.

நமது ஆசிய மண்டலத்திலும், சர்வதேச அளவிலும் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்வதாக உலக அளவில் ஒரே குரலில் பேசப்படுகிறது. அடுத்த 40 ஆண்டுகளில் ஆசியாவில் 300 கோடி மக்கள் தங்களது வளமான வாழ்க்கையை பெறுவார்கள் என நம்புகிறேன்.

உள்கட்டமைப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் ஒற்றுமையின் மூலம் ஆசிய நாடுகள் இணைந்து செயல்பட வேணடும். அதன் மூலம் ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரதன்மை நிலவும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய-தென்கொரிய தலைமை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பின் முதல் கூட்டம் சியோல் நகரில் நடை பெற்றது. அதில் மோடி பேசிய தாவது:

இந்தியாவில் நீர், போக்கு வரத்து, ரயில்வே, கடல் துறைமுகம், கப்பல் கட்டுதல், மின்சாரம், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் சேவைகள் மின்னணு, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.

அத்துடன் தொழில் தொடங்கு வதற்கு தேவையான ஒப்புதல்களை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை நேரடியாக வந்து பார்வை யிட்டு முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

பான் கி மூன் - மோடி சந்திப்பு

பின்னர் அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனை சந்தித் துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பருவநிலை மாற்றம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வது குறித்து இரு தலைவர் களும் ஆலோசித்தனர்.

இந்தியாவை அவமதித்தாரா மோடி? ட்விட்டரில் கண்டனங்கள் குவிகிறது

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு ஷாங்காய் நகரில் பேசிய அவர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஒருகாலத்தில் தங்களை இந்தியர்கள் என்று சொல்ல வெட்கப்பட்டனர், இப்போது பெருமைப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

தென்கொரிய தலைநகர் சியோல் நகரிலும் இதே கருத்தை பிரதமர் மோடி எதிரொலித்தார். பிரதமரின் இந்தப் பேச்சுக்கு ட்விட்டரில் கண்டன கணைகள் குவிந்து வருகின்றன. இதற்காக தனியாக ஹேஸ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 38 ஆயிரம் பேர் ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான இந்தியர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாங்கள் இந்தியர்கள் என்று சொல்ல ஒருபோதும் வெட்கப்பட்டது இல்லை, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x