

இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான பகையுணர்வு காரணமாக, இந்தியர் ஒருவரை ரயில் முன்பு தள்ளிவிட்டுக் கொலை செய்த அமெரிக்கப் பெண் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 24 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவில் வசித்து வருபவர் எரிக்கா மெனென்டெஸ் (33). அவர் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனந்தோ சென் (46) என்ற இந்தியரை ரயில் பிளாட்பாரத்தில் இருந்து தள்ளிவிட்டார்.
இதனால் நிலை தடுமாறி தண்டவாளத்தின் மீது விழுந்த சென், அப்போது வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீஸாரிடம் `9/11 தாக்குதலுக்குப் பிறகு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.
அதன் காரண மாகத்தான் அந்த இந்தியரை ரயில் முன்பு தள்ளிவிட்டேன்' என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி அப்பெண்ணுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.