

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எகிப்தின் சினாய் பகுதியில் மூன்று நீதிபதிகளை மர்ம நபர்கள் நேற்று சுட்டுக் கொன்றனர். மேலும் 3 நீதிபதிகள் படுகாயம் அடைந்தனர்.
எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கும் அவரது ஆதரவாளர்கள் 100 பேருக்கும் கெய்ரோ நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது. 2011-ம் ஆண்டில் மோர்ஸியின் ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் சிறையை உடைத்து வெளியேறிய வழக்கில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பால் எகிப்தில் பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ளது. மோர்ஸியின் ‘முஸ்லிம் சகோதரர்கள்’ கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மோர்ஸிக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் சினாய் பகுதியில் அல் ஆரிஷ் நகரில் நீதிபதிகள் சென்ற பஸ்ஸை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று நீதிபதிகள் உயிரிழந்தனர். மேலும் 3 நீதிபதிகள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் மோர்ஸிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து இத்தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த பகுதி ‘அன்சார் பெய்ட் எல் மக்தஸ்’ என்ற தீவிரவாத குழுவின் ஆதிக்கம் மிக்க பகுதியாகும். இந்த அமைப்பு ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவானது ஆகும்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கும் முஸ்லிம் சகோதரர்கள் கட்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக தற்போதைய எகிப்து அதிபர் அல் சிசி பகிரங்கமாக குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.