

உலகம் முழுவதும் வளரும் நாடுகளில் சிறார் தொழிலாளர்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் அமெரிக்கா, தன் சொந்த நாட்டில் புகையிலைப் பண்ணைகளில் லத்தீன் அமெரிக்கக் குழந்தைத் தொழிலாளர்கள் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது.
புகையிலைப் பண்ணைகளில் 7 வயது சிறார்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடுமையான வியாதிகளில் அவதிப்படுவதாகச் சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியானதில் அமெரிக்காவுக்குத் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மனித உரிமை கண்காணிப்பு குழு 138 பக்க அறிக்கையைத் தயார் செய்து அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையில், குழந்தைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் கறாரான கொள்கைகள் இல்லாததால் புகையிலை பண்ணைகளில் குழந்தைகள் ஆபத்தான, உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும், வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் இதனால் குழந்தைகளுக்கும் வாந்தி, பேதி, தலைவலி, தலைச்சுற்றல் போன்றவை இருந்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நிகோடின் நச்சிற்குச் சிறார்கள் பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை ஈரமாக இருக்கும்போது சிறார்கள் அதனைக் கையாள வேண்டியிருப்பதால் அவர்களின் சருமம் வழியாக நிகோடின் நச்சு அவர்கள் உடலுக்குள் சென்று விடுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை Green Tobacco Sickness என்று நிபுணர்கள் வர்ணிக்கிறார்கள்.
சிறுவயதில் நிகோடின் நச்சு உடலில் சென்றால் அது மூளை வளர்ச்சியையே பாதிக்கும் என்று ஆய்வுகள் தெள்ளத் தெளிவாக நிறுவியுள்ளன.
சுமார் 141 சிறார் தொழிலாளர்களிடம் மனித உரிமை கண்காணிப்புக் குழு விசாரணை நடத்தியதில், 7 முதல் 17 வயது வரையிலான சிறார்கள் கூடுதல் நேரம் பணியாற்ற பணிக்கப்பட்டு அதற்கு ஊதியமும் அளிக்கப்படாத விவரம் தெரியவந்தது. மேலும் கடுமையான வெயிலில் எந்த விதமான நிழலோ, மேற்கூரையோ இல்லாத இடங்களில் பணியாற்ற வைக்கபடுவதும் தெரியவந்தது.
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான சிறார்கள் வேளாண் பண்ணைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் புகையிலைப் பண்ணையில் பணியாற்றும் சிறார்கள் நிலை பற்றி இதுவரை துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைகளில் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தச் சிறார்கள் புகையிலைப் பண்ணைகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இதில் பேரும்பாலும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த குடும்பத்தின் சிறார்களே அதிக அளவுக்குப் பணியாற்றி வருகின்றனர்.
இதில் வேதனை என்னவெனில் அமெரிக்க வேளாண் தொழிலில் ஈடுபட்டுவரும் சிறார்கள் நீண்ட நேரம் பணியாற்ற அமெரிக்கச் சட்டம் இடம் கொடுக்கிறது என்பதே. அமெரிக்காவில் வேறு எந்தத் துறையிலும் இப்படி நடப்பதில்லை என்று கூறப்படுகிறது.
புகையிலைப் பண்ணைகளில் பணியாற்ற சிறார்களுக்குக் குறைந்தபட்ச வயதும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது மற்றொரு வேதனை தரும் விஷயமாகும்.