

உக்ரைன் கிழக்குப்பகுதி நகரான ஸ்லவியான்ஸ்க் பகுதியில் பாதுகாப்புப்படையினர் திங்கள் கிழமை நடத்திய தாக்குதலில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 30 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் படைவீரர்கள் தரப்பில் 4 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமானதாகவும் உள் துறை அமைச்சர் ஆர்சன் அவா கோவ் தெரிவித்தார். மார்ச் மாதம் மாஸ்கோ தன்னுடன் இணைத்துக்கொண்ட கிரிமியா, மற்றும் ரஷ்யா, செசன்யா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த போராளிகள்.
போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கும் நடவடிக்கையின் அங்கமாக ஸ்லவியான்ஸ்க் நகரின் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதலை அதிகரித்தது. இந்த தாக்குதலில் படைவீரர்கள் தரப்பில் உயிரிழப்பு நேர்ந்ததுடன் போர் ஹெலிகாப்டர் ஒன்றை இழக்க நேர்ந்ததாகவும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே ராணுவத்தின் கெடுபிடி காரணமாக இந்த பகுதியில் உணவுப்பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஏஎப்பி நிருபர் தெரிவித்தார்.
மே 25-ம் தேதி அதிபர் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் உக்ரைனில் ரஷ்யா குழப்பத்தை தூண்டி வருவதாக கீவும் மேலை நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன. தமது சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்துவதை புரிந்துகொள்ள மறுப்பது மேலைநாடுகளின் ஆதரவு பெற்ற கீவ் அரசு தான், தேவையில்லாமல் தங்கள் மீது இல்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் கீவ் கையாளும் நடவடிக்கைகளால் உக்ரைனில் பொதுமக்களுக்கு பெரிய அளவில் நெருக்கடிமிக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மாஸ்கோ எச்சரித்துள்ளது.