

கியூபாவின் தலைநகரான ஹவானா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பிடல் காஸ்ட்ரோவுக்கு அரசியலில் ஆர்வம் அப்போதே கொழுந்து விட்டெரிந்தது.
1952ல் அங்கு நடைபெறுவதாக இருந்த தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால் அதற்குள்ளாக அரசை ராணுவத் தலைவர் படிஸ்டா கைப்பற்றியதால் பொதுத் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.
இதன் விளைவாகவோ என்னவோ ஜனநாயகம் என்பதை ஏற்க மறுத்தார் பிடல் காஸ்ட்ரோ. ஆயுதப் புரட்சிதான் சரியான வழி என்று தீர்மானித்தார். 1953ல் இவரும் இவர் சகோதரர் ரால் காஸ்ட்ரோவும் இணைந்து படிஸ்டா அரசின்மீது தாக்குதல் நடத்த, கிடைத்தது ஆட்சி அல்ல. 15 வருட சிறை தண்டனை. பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. மெக்ஸிகோவுக்கு தப்பிச் சென்றார் பிடல் காஸ்ட்ரோ. அங்கு அர்ஜென்டினாவைச் சேர்ந்த மார்க்ஸியத் தலைவர் சே குவாராவின் நட்பும், ஆதரவும் கிடைத்தது.
‘ஜூலை 26 இயக்கம்’ என்பது பிடல் காஸ்ட்ரோவால் உருவாக்கப்பட்டது. இந்தப் புரட்சி இயக்கம் கியூபாவை ஆண்ட சர்வாதிகாரி படிஸ்டாவுக்கு எதிரானது. சொல்லப் போனால் அவரைப் பதவியிலிருந்து இறக்கு வதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே.
சாண்டியாகோ நகரில் இருந்த அரசின் ராணுவப் பகுதியின்மீது இந்த அமைப்பு தன் முதல் தாக்குதலை நடத்தியது ஜூலை 26, 1953 அன்று. அதனால் இந்தப் பெயர் அதற்குக் கிடைத்து விட்டது. (இந்தத் தாக்குதல் வெற்றிகரமானதாக இல்லை என்பது வேறு விஷயம்).
மெக்ஸிகோவிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. படிஸ்டாவின் ஆட்சியை நீக்குவதற்காக கட்டுப்பாடு நிறைந்த கெரில்லா படையாக இது மாறியது.
படகுகளின் மூலமாக 1956 டிசம்பர் 2 அன்று இந்த இயக்கத்தினர் கியூபாவை அடைந்தனர் இந்த இயக்கத்தைச் சேர்ந்த 82 பேர். பட்டப் பகலில் இவர்கள் வந்து இறங்கியதால், கியூபாவின் விமானப்படை இவர்களின் மீது தாக்குதல் நடத்தியது. தவிர இந்த அணியினர் இரண்டாகப் பிரிந்து விட்டனர்.
உணவுகூட போதிய அளவில் கிடைக்கவில்லை. அரசு ராணுவத்தினரால் பலரும் கொல்லப்பட்டனர். சே குவாரா கழுத்தில் சுடப்பட்டார். என்றாலும் காயம் பட்ட சக கெரில்லா வீரர்களுக்கு அவர் தொடர்ந்து மருத்துவ உதவிகளைச் செய்தார். (அவர் மருத்துவம் படித்தவர்).
புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த 82 பேரில் 12 பேர் மட்டுமே உயிர் தப்பினர். கொல்லப்பட்டவர்களில் பிடல் காஸ்ட்ரோவும் ஒருவர் என்று தவறாக நம்பிய படிஸ்டா அவசரமாக இதை அறிவிக்கவும் செய்தார். பிறகுதான் உண்மை புரிந்தது. இதுதான் கியூபா புரட்சியின் தொடக்க கட்டம். போகப்போக இது வலுவடைந்தது.
சியெரா மாஸ்ட்ரா என்பது கியூபாவின் எல்லைப் பகுதியில் அடர்ந்த காடுகள் அமைந்த மலைத் தொடர். இதைத்தான் தங்களது முக்கிய களமாகத் தேர்ந்தெடுத்தனர் பிடல் காஸ்ட்ரோவும், அவரது புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும். இந்த மலைப் பகுதியில் மறைந்தபடிதான் படிஸ்டாவின் ராணுவ வீரர்கள்மீது சுமார் இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள்.
நடுநடுவே சிறு சிறு ராணுவப் பகுதிகள்மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள ஆயுதத் தளவாடங்களை கடத்தினார்கள். அதே சமயம் தங்களால் தாக்கப்பட்ட ராணுவத்தினருக்கு மருத்துவ உதவிகளையும் இவர்கள் அவ்வப்போது செய்து வந்தனர்.
மறுபுறம் கியூபாவின் காவல்துறை இரும்புக்கரத்தோடு செயல்பட்டது. பிடல் காஸ்ட்ரோவின் இயக்கத்தில் அன்டோனியோ, ஃபிராங் பயஸ் ஆகியோரும் அந்தப் புரட்சிக் குழுவின் அபிமானத்தைப் பெற்ற தலைவர்களாக இருந்தனர். ஆனால் நடந்த தொடர் தாக்குதல்களில் அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுவிட, இயக்கத்தின் போட்டியற்ற சிங்கிள் தலைவரானார் பிடல் காஸ்ட்ரோ.
உள்ளூரில் கடும் தணிக்கை என்பதால் பிடல் காஸ்ட்ரோவின் கருத்துகள் மக்களை அடையவில்லை. எனவே கில்லாடி பிடல் காஸ்ட்ரோ வெளிநாட்டு ஊடகங்களைத் தொடர்பு கொண்டார். நியூயார்க் டைம்ஸ் இதழில் பிடல் காஸ்ட்ரோவின் நேர்முகம் வெளியானதும் அவரது புகழ் மிகவும் பரவியது.
1958ல் பிடல் காஸ்ட்ரோவின் இயக்கம் மேலும் வலிமை பெற்றது. வேறுவழியின்றி ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கியது.
மருத்துவமனை, தொழிற்சாலை, பள்ளி, சுரங்கம் என்று ஒவ்வொன்றாக புரட்சி இயக்கத்தின் கைவசம் ஆயின.
படிஸ்டாவுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு சரிந்து கொண்டிருந்தது. அவரது கடும் தகவல் தணிக்கைமுறை மற்றும் பிடிக்காதவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும் போக்கு ஆகியவை இதற்கான முக்கிய காரணங்கள். இதை அறிந்த அமெரிக்கா படிஸ்டா ஆட்சிக்குத் தாங்கள் அளித்து வந்த ஆயுத உதவிகளை நிறுத்திக் கொண்டது.
(உலகம் உருளும்)