

சீனப் பயணத்தின்போது, அந்நாட்டு கோயிலில் குஜரத்திய மொழியில் பிரதமர் மோடி எழுதிவிட்டு வந்த குறிப்பு மொழிபெயர்ப்பாளர்களை பெரிய அளவில் குழப்பமடையச் செய்து திணறடித்தது.
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்களின் ஒரு பகுதியாக தற்போது தென் கொரியாவிலிருந்து மங்கோலியா சென்றுள்ளார். முன்னதாக அவர் தனது 3 நாட்கள் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
இந்த நிலையில் சீனாவிலிருந்து புறப்படும் முன்பாக அந்நாட்டின் நகரமான ஜியானில் அமைந்திருக்கும் தஸிங்ஷான் கோயிலுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது கோயிலின் குறிப்பில் தனது தாய் மொழியான குஜராத்தியில் குறிப்பு எழுதிவிட்டு வந்தார்.
இதனிடையே சீனாவில் குஜராத்தி மொழி அறிந்தவர்கள் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், மோடி எழுதிவைத்ததன் சாராம்சம் புரியாமல் அதிகாரிகள் தவித்தனர்.
பின்னர், அங்குள்ள வடகிழக்கு ஜியான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் லீ லீ என்பவரை அதிகாரிகள் அனுகினர். அடுத்ததாக அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த குவான் ஷூஜிக்கு மோடி எழுதிய குறிப்பு அனுப்பப்பட்டது.
அவரால் மோடி எழுதியது குஜராத்தி மொழி என்று கண்டறியப்பட்டு, தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஷூஜியின் நண்பரால் இந்தி மொழிக்கு மொழிப் பெயர்க்கப்பட்டு, மறுபடியும் குவான் ஷூஜியால் ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு, பின்னர் இறுதியாக சீன மொழி வடிவில் லீ லீ என்ற பேராசிரியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
"சீனாவில் சுயீ மன்னராட்சி காலத்தில் அரண்மனையில் பணியாற்றிய துறவி தர்மகுப்தா, புத்த மதம் குறித்த கருத்துக்களை சீனாவில் பரப்பி உலகத்துக்கு அமைதியின் நோக்கத்தை பரப்பினார். அவரது பங்களிப்பு மதிக்கப்பட வேண்டியது" என்பது தான் சீன கோயிலில் குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதி வைத்த குறிப்பு.
துறவி தர்மகுப்தா குஜராத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.