

குவெட்டா: பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் 10 நாட்களில் 27 தாக்குதல்கள் நடத்தியதாகவும், இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 42 பேர் கொல்லப்பட்டதாகவும் பலுச் விடுதலைப்படை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானை பிரிக்க பலுச் விடுதலைப்படை என்ற அமைப்பு கடந்த 2000-ம் ஆண்டு முதல் போராடி வருகிறது. இவர்களை தீவிரவாதிகளாக அறிவித்து பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பலுச் விடுதலைப் படை செய்தி தொடர்பாளர் ஜீயந்த் பலுச் நேற்று வெளியிட்ட அறிக்கை: பலுசிஸ்தான் மாகாணத்தின் பல இடங்களில் கடந்த 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 27 தாக்குதல்களை பலுச் விடுதலைப் படை மேற்கொண்டது. சோண்டா, அல்மார்க் பகுதிக்குள் நுழைந்த பாக். ராணுவ வீரர்களை ரிமோட் கன்ட்ரோல் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினோம்.
அதன்பின் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினோம். பாக். படைகள் மீது ட்ரோன் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் பாக். ராணுவ வீரர்கள் 42 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ஷாரக், ஹர்னாய் பகுதியில் நடைபெற்ற மோதலில் ஒரு பாக்.வீரரை உயிருடன் பிடித்தோம். ராணுவ நிலைகளை கைப்பற்றி ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினோம்.
இந்த தாக்குதலில் உள்ளூர் மக்கள் 10 பேரும் உயிரிழந்தனர். பலுச் விடுதலைபடையைச் சேர்ந்த 3 வீரர்கள் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர். இவ்வாறு பலுச் விடுதலைப் படை கூறியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாகிஸ்தான் கடலோர காவல்படையைச் சேர்ந்த வீரர்கள் 3 பேரை, அரபிக்கடல் பகுதியில் பலுச் படையினர் சுட்டுக் கொன்றனர். அதன்பின் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.