

ஸ்டாக்ஹோம் பாலியல் பலாத்கார வழக்கில் பிறப்பிக்கப்பட்ட கைது ஆணையை ரத்து செய்யக் கோரி விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஸ்வீடன் நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
ஜூலியன் அசாஞ்சே மீது இரு ஸ்வீடன் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒருவர் பாலியல் பலாத்கார புகாரையும், மற்றொருவர் பாலியல் அத்துமீறல் புகாரையும் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு அசாஞ்சேவுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தான் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.“கைது ஆணையை ரத்து செய்வதற்கு உரிய காரணங்கள் ஏதுமில்லை” எனக் கூறி அசாஞ்சேவின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக இவ்வழக்கு முடங்கிக் கிடக்கும் நிலையில், ஸ்வீடனுக்கு வந்து குற்றச்சாட்டை எதிர்கொள்ள வலியுறுத்தி வந்த தங்களது கோரிக்கையை ஸ்வீடன் தளர்த்திக்கொண்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஸ்வீடன் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அசாஞ்சேவிடம் லண்டனில் வைத்து விசாரணை நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர். இம்முடிவுக்கு அசாஞ்சேவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. இதனால், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவோம் என்பதால், ஸ்வீடனுக்குச் செல்ல அசாஞ்சே மறுத்து வருகிறார்.