

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற செய்தி அமெரிக்க ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளதை அமெரிக்க பத்திரிகைகள் வெகுவாக புகழ்ந்துள்ளன.
“நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்பு – மாற்றுக்கு அழைப்பு” என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை தலைப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு மோடி அழைப்பு விடுத்ததை அப்பத்திரிகை புகழ்ந்துள்ளது. இதன் மூலம் இரு அண்டை நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினைகள் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீ விற்பவரின் மகனான மோடி, இந்தியாவின் இந்து தேசியவாத இயக்கத்தைப் பின்பற்றி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துத் தருவதாக இந்தியர்களுக்கு அவர் உறுதியளித்துள்ளார் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
மன்மோகன் சிங்கின் அரசு வீழ்வதற்கு ஊழலும், விலைவாசி உயர்வும் முக்கியக் காரணமாக இருந்தன. அவையே மோடி தீர்க்க வேண்டிய முதன்மை பிரச்சினையாக இருக்கும் என்று சிஎன்என் தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான உறவை மோடி வலுப்படுத்துவார். இந்திய சீன உறவில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும் என்று சீனா டெய்லி செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலில் மோடி முன்னேற்றம் அடைந்த விதம் குறித்து கடைசி பக்கத்தில் அரைப் பக்கத்துக்கு சிறப்பு கட்டுரையையும் சீனா டெய்லி வெளியிட்டுள்ளது.