பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சீன பத்திரிகையில் கட்டுரை

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சீன பத்திரிகையில் கட்டுரை
Updated on
1 min read

பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் சீன அரசு செய்தித்தாளில் அவரை விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

ஷாங்காய் சமூக அறிவியல் அகாடமியைச் சேர்ந்த ஆய்வாளர் ஹியூ ஜியோங் என்பவர், “மோடியின் வருகையினால் சீன-இந்திய உறவுகள் மேம்படுமா?” என்ற தலைப்பில் அவர் கட்டுரை எழுதி அது குளொபல் டைம்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சீன-இந்திய எல்லைப் பிரச்சினைகளில் மோடி, ‘சிறிய தந்திரங்களைக் கடைபிடித்து வருகிறார்’என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையில் கூறியிருப்பதாவது:

மோடி பிரதமர் பதவி ஏற்ற நாள் முதல் இந்தியாவின் உறவுகளை ஜப்பான், அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பேணி வளர்ப்பதில் பாடுபட்டு வருகிறார். இதன் மூலம் நாட்டின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளை சீர் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

ஆனால், கடந்த ஆண்டு இவரது அயல்நாட்டுக் கொள்கைகள், மோடி ஒரு நடைமுறைவாதி என்பதையே எடுத்துக் காட்டியது, எதிர்காலம் குறித்து சிந்திப்பவராக அல்ல.

இந்திய-சீன தலைவர்கள், அரசியல் நம்பகத்தன்மையை வளர்த்தெடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளைத் தக்கவைப்பதிலும் வெறும் பேச்சாக மட்டுமேயல்லாமல் செயலிலும் தங்கள் நோக்கங்களை வெளிப்படுத்துவது அவசியம்.

இந்த விவகாரத்தில், மோடி, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு வருகை தரக்கூடாது (அருணாச்சலப் பிரதேசம்), அது அவரது அரசியல் ஆதாயத்துக்கு வழிவகுக்கும். மேலும், இருதரப்பு உறவுகளில் தலையீடு செய்யும் எந்த வித அறிவிப்பையும் மோடி வெளியிடக்கூடாது.

மேலும், இந்திய அரசு தலாய் லாமாவுக்கு அளிக்கும் ஆதரவை முழுதும் நிறுத்த வேண்டும், இந்திய-சீன உறவுகளில் திபெத் பிரச்சினை ஒரு தடைக்கல்லாக இல்லாதவாறு இந்திய அரசு செயல்படுவது அவசியம்.

சீனாவுடன் போட்டியிடுவதற்காக மற்ற அண்டை நாடுகளுடன் மோடி உறவுகளைப் பலப்படுத்துகிறார். அதே வேளையில் சீனா உருவாக்கிய பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.

மேலும், எல்லைப் பிரச்சினைகளிலும், பாதுகாப்பு விவகாரங்களில் சிறு தந்திரங்களைக் கடைபிடித்து தனது உள்நாட்டு கவுவரவத்தை நிலைப்படுத்த எண்ணுவதோடு, சீனாவுடனான உறவுகளின் பயன்கள் மீதும் கவனம் செலுத்த நினைக்கிறார்”

இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in