

நேபாளத்தில் 2 முறை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 8,635 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 89 வெளிநாட்டினர் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்களை இன்னும் காணவில்லை.
இது தொடர்பான புள்ளிவிவரங்களை நேபாள காவல்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 49 இந்தியர்கள் உட்பட 79 வெளிநாட்டினர் நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டுள்ளனர். முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட ஏப்ரல் 25-ம் தேதி முதல், சுமார் 240 நேபாளிகள், 89 வெளிநாட்டினரை இதுவரை காணவில்லை.
இந்தியா உட்பட 18 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். இவர்களில் 851 இந்தியர்கள் உட்பட 2,509 பேர் ஏற்கெனவே தங்கள் நாடுகளுக்குத் திரும்பி விட்டனர். 564 இந்தியர்கள் உட்பட 1,807 வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மற்றும் மே 12-ம் தேதி ஏற்பட்ட 2 கடும் நிலநடுக்கங்களில் 8,635 பேர் இறந்துள்ளனர். 21,845 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
நேபாளத்தில் நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வுகள் நேற்று முன்தினமும் ஏற்பட்டன. 5 முறை ஏற்பட்ட இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 4 முதல் 5 அலகுகள் வரை பதிவாகின. ஏப்ரல் 25-ம் தேதி நிலநடுக்கத்துக்குப் பிறகு இதுவரை 255-க்கும் மேற்பட்ட பிந்தைய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா, சீனா, மற்றும் அமெரிக்கா சார்பில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் இந்தியா சார்பில் 13, சீனா சார்பில் 3, அமெரிக்கா சார்பில் 7 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் 2 நிலநடுக்கங்களுக்குப் பிறகு நேபாளத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் புனரமைப்பு பணிகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகளில் 1 லட்சம் பேரை ஈடுபடுத்தும் நேபாள அரசின் திட்டம் கடினமாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.