

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிச் சிறுமிகளை மீட்பதற்காக அமெரிக்கா 80 ராணுவ வீரர்களை அந்நாட்டின் எல்லையான சாட் எனும் இடத்திற்கு அனுப்பியுள்ளது.
கடந்த மாதம் 'போகோ ஹராம்' அமைப்பின் தீவிரவாதிகளால் நைஜீரிய நாட்டின் பள்ளி ஒன்றிலிருந்து 200 சிறுமிகள் கடத்தப்பட்டனர்.
அவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற்றப்பட்டதாக அந்த அமைப்பு வீடியோ பதிவுகளை வெளியிட்டது.
இந்நிலையில், அமெரிக்கா 80 படை வீரர்களை சாட் பகுதிக்கு அனுப்பியுள்ளது.. இந்த வீரர்கள் துப்பறிதல், கண்காணிப்பு மற்றும் எதிர்த்தாக்குதல் நடத்தும் விமானங்களை நைஜீரியா மற்றும் சுற்றுப்புற இடங்களில் இயக்க உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்கப்படும் வரை இவர்கள் நைஜீரியாவிலேயே இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் சிறுமிகளைத் தேடும் பணியில் நைஜீரியாவுக்கு உதவ நிபுணர் குழுவை அனுப்பியிருந்தன.