

பப்புவா நியூ கினி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் சுனாமி பேரலை ஆபத்து எழும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது பேரலைகள் கடந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், கோகோபோ நகரின் தெற்கு தென்மேற்கு திசையில் 133 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் 63 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவானது.
இதனையடுத்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி பேரலைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தது. பின்னர், அந்த சுனாமி பேரலைகளால் எந்த ஆபத்தும் நேரவில்லை என்றும் கூறியது.
கடந்த வாரம் இதே பகுதியில் 6.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய புவி அறிவியலாளர் ஜோனதன் பாத்கேட் கூறும்போது, "நிலநடுக்கம் ஏற்படப் போவதை நம்மால் முன் கூட்டியே கணிக்க முடியாது. கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைக் காட்டிலும் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் பெரிய அளவினதாக உள்ளது. ஆக, இதை விடப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றார்.