Published : 13 May 2015 11:05 AM
Last Updated : 13 May 2015 11:05 AM

உலக மசாலா: சாப்பாடா, புகைப்படமா?

உணவு சமைப்பதோடு அவற்றை அலங்காரம் செய்து புகைப்படங்கள் எடுக்கும் கலை பிரபலமாகி வருகிறது. இஸ்ரேலைச் சேர்ந்த உணவு விடுதி ஒன்றில் பரிமாறப்படும் உணவுகளைப் புகைப்படங்கள் எடுப்பதற்கு வசதியாக தட்டுகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன.

தட்டு போல தோற்றம் இல்லாமல், கண்ணாடி ஸ்டாண்ட் போல தோற்றம் அளிக்கின்றன. தட்டின் ஓரத்தில் செல்போனை வைத்துப் படம் பிடிக்கும் விதத்தில் சிறிய ஸ்டாண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. உணவைத் தட்டில் வைத்தவுடன் எதிர்ப் பக்கம் இருக்கும் பகுதியில் அழகாக பிரதிபலிக்கிறது. வேண்டிய அளவுக்குப் படம் பிடித்துவிட்டு, சாப்பிடலாம்.

புகைப்படம் எடுக்கும் ஆர்வம் சாப்பாடு தட்டு வரை வந்துவிட்டது…

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசிக்கிறார் 75 வயது ஹுவான் க்யி. அவரது மனைவி 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரே மகனும் தூர தேசத்தில் வேலை செய்து வருகிறார். தூரத்து உறவினர்கள் எப்பொழுதாவது வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.

தனிமை ஹுவானை வாட்டி வதைத்தது. தன்னுடைய பிரச்சினை தீர்வதற்கு அவரே ஒரு முடிவு எடுத்துவிட்டார். தன்னை யாராவது தத்தெடுத்துக்கொள்ள வேண்டும். தத்தெடுக்கும் குடும்பம் அவருடைய வீட்டிலேயே இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். தன்னுடைய பென்ஷன் முழுவதும் கொடுத்து விடுவார். அவர்களுக்கும் தங்கும் இடம் இலவசம். இதனை விளம்பரமாகக் கொடுத்துவிட்டார்.

முதுமையில் தனிமை கொடுமை…

ஊட்டச் சத்து நிபுணர்கள் பொதுவாகச் சமச்சீர் உணவுகளே மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்கிறார்கள். ஆனால் ஆண்டர்சன் குடும்பத்துக்கு இந்த விதி பொருந்தவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இறைச்சிகளை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக, உறுதியான உடலுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இறைச்சியை வைத்துப் பரிசோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட உணவு முறைக்கு வந்துவிட்டனர். எண்ணெய், மசாலா, உப்பு சேர்க்கப்படாத இறைச்சியைச் சமைத்து இரவில் வயிறு நிறையச் சாப்பிடுகிறார்கள். பகலில் பசி எடுக்கும்போது இறைச்சியும் தண்ணீரும் சேர்த்துக்கொள்கிறார்கள். பால், காபி, தேநீர் எவற்றையும் பருகுவதில்லை.

மிகக் குறைவான உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள். அப்படியிருந்தும் எடை அதிகரிக்கவில்லை. 56 வயது ஆண்டர்சன் பார்ப்பதற்கு மிக இளமையாக இருக்கிறார். ஆண்டர்சன், சார்லின் தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள். அவர்களும் இதே உணவுப் பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்போ, நோய் வரும் வாய்ப்போ இந்த உணவுப் பழக்கத்தில் இல்லவே இல்லை என்கிறார் ஆண்டர்சன்.

அதெல்லாம் சரி… ஆனா தினமும் சாப்பிட்டால் சலிப்பு வந்துடாதா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x