

இராக்கில் உள்ள மிகச்சிறந்த 5 நட்சத்திர விடுதி என்ற தகுதி பெற்ற நினாவா ஹோட்டலை தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பு, சகல வசதிகளுடன் தங்களது ‘கமாண்டர்கள்’ தங்க மீண்டும் திறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
11 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் 262 ஆடம்பர அறைகள் உள்ளன. டைக்ரிஸ் நதியின் கரையில் அல்-காபட் வனத்துக்கு அருகில் இந்த விடுதி அமைந்துள்ளது. இங்கு ஐ.எஸ். அமைப்பு தனது கமாண்டர்களையும், தங்கள் அமைப்புக்கு ஆதரவு தரும் வெளிநாட்டு முக்கியஸ்தர்களுக்காகவும் மறு கட்டுமானம் செய்து மீண்டும் திறந்துள்ளதாக ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.
தங்கள்து விருந்தாளிகளுக்காக இந்த விடுதியை அழகாக்கும் பணிகளில் சிலர் ஈடுபட்டிருந்ததன் புகைப்படங்கள் ஆன் லைனில் வலம் வரத் தொடங்கியுள்ளன.
ஒரு காலத்தில் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நினாவா இண்டெர்னேஷனலில் இனி மதுபானம், பாட்டு, இசைக் கூத்துக்கள், புகைபிடித்தல், சூதாட்டம் போன்றவை கிடையாது.
இரண்டு ஆடம்பர் ரெஸ்டாரண்ட்கள் மற்றும் 2 நடன ஹால்கள், உடற்பயிற்சி மையங்கள், அழகான நீச்சல் குளம், டென்னிஸ் ஆடுகளம் ஆகியவை இந்த 5 நட்சத்திர விடுதியின் சிறப்பம்சங்களாகும்.
மே 1-ம் தேதி இந்த விடுதித் திறப்பு விழாவை ஐ.எஸ். நடத்தியதாகவும், இதற்கு அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் வருகை தர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஐ,எஸ். தொடர்பான ட்விட்டர்கள் சில தெரிவித்திருந்தன.
திறப்பு விழாவை சீரும் சிறப்புமாக வாண வேடிக்கைகளுடன் ஐ.எஸ். கொண்டாடியது பற்றி தீவிரவாத எதிர்ப்பு இயக்க ஆய்வாளர் சார்லஸ் விண்டர், கூறும் போது, "மொசூலில் கூட்டணி படைகள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் தங்கள் அமைப்புக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதற்காக இந்த ஹோட்டல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ளது ஐ.எஸ்.
எப்போதுமே தங்களால் தாக்குதலுக்குள்ளான கட்டிடங்களின் இடிபாடுகள், சிதைந்த உடல்களை காண்பித்து பழகிய அந்த அமைப்பு திடீரென விடுதி ஒன்றை அழகாக கட்டமைத்து அதனை தாங்கள் எவ்வாறு சாதித்தோம் என்று தொடர்ச்சியாக செய்தி வெளியிட வேண்டிய தேவை இல்லை. அந்தத் தேவை எழுந்ததன் காரணம், கூட்டணி படைகளின் தாக்குதல்களால் தாங்கள் பின்னடைவு கண்டுவிடவில்லை என்பதை உலகுக்கு காட்டவே” என்றார்.