

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமல்படுத்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சே முன்வந்துள்ளார்.
ஆனால், சர்வதேச விசாரணைக்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவ வீரர்கள் மனித உரிமை மீறலிலும், போர்க் குற்றத்திலும் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தரப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் அமல்படுத்த ராஜபக்சே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், சர்வதேச விசாரணைக்கு மட்டும் ஒப்புக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்கு வந்துள்ள ஜப்பானின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செய்ஜி கிஹாரா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, செய்ஜியிடம் ராஜபக்சே கூறுகையில், “ஐ.நா. தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதை பிற நாடுகளிடம் கூறுங்கள். எனினும், சர்வதேச விசாரணை என்பதை மட்டும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
அதற்கு செய்ஜி கிஹாரா கூறியதாவது: “ஐ.நா. தீர்மானம் இலங்கைக்கு எந்த வகையிலும் உதவாது என்பதே எங்களின் கருத்து. அதனால்தான் அது தொடர்பாக வாக்கெடுப்பில் நாங்கள் பங்கேற்கவில்லை.
சர்வதேச அமைப்புகள் தயாரிக் கும் பாரபட்சமிக்க அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரச்சினைகள் அனைத்தையும் இலங்கை அரசு ஒன்றன் பின் ஒன்றாக தீர்த்துவிடும் என நம்புகிறேன். அதற்கு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.
கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, ஜப்பான், இந்தியா உள்பட 12 நாடுகள் வாக்குப்பதிவில் பங்கேற்கவில்லை. எனினும், 24 நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கையில் செயல்படும் தேசியவாத கூட்டமைப்பைச் சேர்ந்த குணதாசா அமரசேகரா கூறுகையில், “சர்வதேச விசாரணையை மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆணையர் நவநீதம் பிள்ளை மற்றும் அலுவலர்களை இலங்கை அரசு அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அரசு தெரிவிக்க வேண்டும்” என்றார்.