

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலம் பீக்வட் லேக்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஸ்டாஸி எர்ஹோல்ட்ஸ் (50). மல்டிபிள் மயலோமா என்ற புற்றுநோயால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்தார். எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களில் ஏற்படுவதுதான் ‘மயலோமா’ புற்றுநோய். எலும்பு புற்றுநோய் என்றும் அழைக்கப்படு கிறது. ரத்தப் புற்றுநோயின் ஒரு வகைதான் இது. மல்டிபிள் மயலோமா பாதிப்பால் தண்டுவடம், விலா எலும்பில் கடுமையான வலி ஏற்படும். நோய் முற்றினால் நகர முடியாமல் முடக்கிப்போட்டுவிடும். ரத்தசோகை உண்டாகும். சிறுநீரகம் பாதிக்கப்படும். நுரையீரல் தொற்று ஏற்படும். நரம்பு மண்டலம் செயலிழக்கும்.
மேற்கண்ட அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டு, ஏறக்குறைய இறக்கும் நிலைக்குப் போய்விட்ட ஸ்டாஸி, ரோசஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்குக்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டார். சோதனை முயற்சியாக அவருக்கு ‘ஆன்கோலிடிக் வைரோதெரபி’ சிகிச்சை முறையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். 6 மாத சிகிச்சைக்குப் பிறகு, மயலோமா புற்றுநோயில் இருந்து அவர் பூரணமாக குணமடைந்துள்ளார்.
இந்த வெற்றிகரமான சிகிச்சையை அளித்திருப்பது டாக்டர் ஸ்டீபன் ரஸல் தலைமையிலான மருத்துவக் குழுவினர். இதுபற்றி அவர்கள் கூறியிருப்பதாவது:
மிகவும் மோசமான நிலையில் இருக்கும் புற்றுநோயாளிகள் தட்டம்மை போன்ற வைரஸ் நோயால் பாதிக்கப்படும்போது, அவர்களது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். வைரஸை விரட்டுவதற்காக இயற்கையாகவே உடலில் புரோட்டீன்கள் உற்பத்தியாவதே இதற்கு காரணம். இன்டர்ஃபெரான் புரோட்டீன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். டியூமர் நெக்ரோசிஸ் ஃபேக்டர் புரோட்டீன், தீய செல்களை அழிக்கும். புற்றுநோய் செல்கள் அழிந்து, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் அவர்களது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது.
வைரஸ் நோய்க்கு பதிலாக, வைரஸ் கிருமிகளை நேரடியாக ஊசி மூலம் உடலில் செலுத்துவதுதான் ‘ஆன்கோலிடிக் வைரோதெரபி’ சிகிச்சை. இதுகூட பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருப்பதுதான். புற்றுநோய் தீவிரமான நோயாளிகளுக்கு எந்த வகை சிகிச்சையும் பலனளிக்காத நிலையில், கடைசியாக இந்த சிகிச்சை அளிக்கப்படும்.
1 கோடி தடுப்பூசியில் உள்ள கிருமி
ஸ்டாஸிக்கும் இந்த சிகிச்சைதான் அளிக்கப்பட்டது. தட்டம்மை தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் அதே தட்டம்மை வைரஸ் கிருமிதான் அவரது உடலில் செலுத்தப்பட்டது. 1 கோடி பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கு எந்த அளவு தட்டம்மை வைரஸ் கிருமி தேவைப்படுமோ, அந்த அளவுக்கு வீரியான கிருமிகளை அவரது உடலில் ஊசி மூலம் செலுத்தினோம். இதன் காரணமாக அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. வாந்தி, மூச்சுத் திணறலும் இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்ததில், இந்த பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. அத்துடன், அவரது உடலில் இருந்த புற்றுநோய்க் கட்டிகளும் மறைந்துவிட்டன. இருந்த சிற்சில கட்டிகளும் கதிர்வீச்சு மூலம் அகற்றப்பட்டுவிட்டன.
இதேபோல, தட்டம்மை கிருமியைப் பயன்படுத்தி ‘ஆன்கோலிடிக் வைரோதெரபி’ சிகிச்சை அளித்ததில் இன்னொரு மயலோமா நோயாளியும் புற்றுநோயில் இருந்து ஓரளவு விடுபட்டுள்ளார்.
‘ஆன்கோலிடிக் வைரோதெரபி’சிகிச்சையால் பூரணமாக குணமான முதல் நோயாளி ஸ்டாஸி என்று சொல்லலாம். சம்பந்தப்பட்ட இரண்டு நோயாளிகளையும் பொருத்தவரை எங்கள் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது. புற்றுநோயாளிகள் அனைவருக்கும் இந்த வகை சிகிச்சையைப் பயன்படுத்த முடியுமா, தட்டம்மை வைரஸ் கிருமியை மருந்தாகப் பயன்படுத்தி புற்றுநோயை விரட்ட முடியுமா என்பதை நிரூபிக்க இன்னும் அதிக ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். இத்தகவல் மயோ கிளினிக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சராசரியாக ஆண்டு தோறும் 16 ஆயிரம் பேர் மல்டிபிள் மயலோமா வகை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், வி.பி.சிங் இருவருமே மல்டிபிள் மயலோமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.