

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் திருமணத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேரை உறவினர் ஒருவர் சுட்டுக்கொன்றார்.
குலாப் அகமது என்பவர் நேற்று தனது மாமனாரின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது மாமனார், 2 சிறுவர்கள், 5 பெண்கள் மற்றும் இருவர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். முன்னதாக இந்த நபர் தனது வீட்டில் தனது தந்தை, சகோதரன் மற்றும் மைத்துனியை சுட்டுக்கொன்றுள்ளார்.
இதையடுத்து அச்சத்தில் அவரது மனைவி தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். தங்கள் மருமகன், குடும்பத்தினர் 3 பேரை கொலை செய்ததை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர், தங்கள் மகளை அவருடன் அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமுற்று மாமனார் வீட்டில் இருந்தவர்களை குலாப் அகமது சுட்டுக்கொன்றுவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருமணத் தகராறே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.