

பிரதமர் மோடி தனது 3 நாடுகள் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு அந்நாட்டு அரசு முறைப்படி வரவேற்பு அளித்தது.
விமானப் பயணத்தின்போது நிருபர்களிடம் பேசிய மோடி, ராஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்ததை சுமூகமாக மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கு வரும் இன்று முதல் முதல் 16-ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
3 நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக நேற்று மாலை டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸுக்கு தனி விமானத்தில் புறப்பட்டார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த அதிகாரிகள் குழுவினரும் சென்றனர். அவரது விமானம் நேற்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றடைந்தது. அங்கு அவரை அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் பிரான்ஸ் வாழ் இந்தியர்களும் வரவேற்றனர்.
போர் விமான கொள்முதலில் பிரான்ஸுடன் சுமூக உடன்பாடு:
தனது பயணத்தின்போது விமானத்தில் பிரான்ஸ் நாட்டு பத்திரிகை நிருபர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பிரான்ஸ், இந்தியாவின் நீண்ட கால தோழமை நாடாக திகழ்கிறது. இரு நாடுகளும் பல விஷயங்களில் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறது. முக்கியமாக பாதுகாப்பு, அணு சக்தி போன்றவற்றில் ஒரே நிலைப்பாடை கொண்டிருக்கிறது. ஒருமித்த சிந்தனைகள் கொண்ட நாடுகள் இணைந்து பல சாதனைகளை படைக்க முடியும்" என்றார்.
ராஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து பேசுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதில் இரு நாடுகளும் சுமுகமான அணுகுமுறையை கையாண்டு தீர்வு காண வேண்டும்" என்றார்.
இந்தப் பயணத்தில் சுற்றுலா, வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ரயில்வேத் துறை மேம்பாடு உள்ளிட்ட பலத் துறைகள் குறித்து பிரதமர் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.