

2016-ம் ஆண்டுக்கான எச்-1பி விசா கோரும் விண்ணப்பங்களை அமெரிக்கா, இம்மாதத்தில் கடந்த 7-ம் தேதி வரை பெற்றது. இதில் முதல் 5 நாட்களிலேயே இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, விசா உச்சவரம்பை எட்டியதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றப் பணிகள் துறை (யுஎஸ்சிஐஎஸ்) கூறும்போது, “எச்-1பி விசாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தால் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2016-ம் நிதியாண்டுக்காக பெறப்பட்ட விசா விண்ணப்பங்கள் இந்த உச்சவரம்பை எட்டிவிட்டன. இதுதவிர அமெரிக்காவில் பட்ட மேற்படிப்புக்கான எச்-1பி விசா விண்ணங்களும் அதன் உச்சவரம்பை (20 ஆயிரம்) கடந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுப்பிரிவில் 65 ஆயிரம் விசாக்களும் உயர்க்கல்வி பிரிவில் 20 ஆயிரம் விசாக்களும் வழங்குவதற்கு, விண்ணப்பங்களை கணினியில் ரேண்டம் முறையில் (லாட்டரி முறையில்) தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை யுஎஸ்சிஐஎஸ் தொடங்க உள்ளது.
உயர்க்கல்வி பிரிவில் 20 ஆயிரம் விசாக்களுக்கான விண்ணப்பங்களை யுஎஸ்சிஐஎஸ் முதலில் ரேண்டம் முறையில் தேர்வு செய்யும். இதில் தேர்வு செய்யப்படாத விண்ணப்பங்கள், பொதுப்பிரிவு விண்ணப்பங்களுடன் சேர்க்கப்படும்.
எச்-1பி விசாவுக்கு அதிக அளவு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், ரேண்டம் தேர்வு நடைபெறும் தினத்தை யுஎஸ்சிஐஎஸ் இதுவரை அறிவிக்கவில்லை.