பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதலில்: 60 தீவிரவாதிகள் சாவு
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்குமிடங்கள் மீது அந்நாட்டு ராணுவம் புதன்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 60 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள வடக்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் மீர் அலி நகரம் மற்றும் அதையொட்டிய பகுதியில், ஜெட் போர் விமானங்கள் மற்றும் ஹெலி காப்டர்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் கூறவிரும்பாத ராணுவ அதிகாரி மற்றும் 2 உளவுத் துறை அதிகாரிகள் கூறினர்.
இத்தாக்குதலில் அருகில் உள்ள கிராமத்தில் பொது மக்கள் சிலரும் உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். சயீதுல்லாகான் என்பவர் கூறுகை யில், “புதன்கிழமை அதிகாலை முதல் ராணுவம் தரைவழி தாக்குதலிலும் ஈடுபட்டது. குண்டு வீச்சால் எழும் பலத்த ஓசைகளை கேட்டோம். சில வீடுகள் தரை மட்டமானதை பார்த்தேன்” என்றார்.
ஆனால் இங்கு நடைபெற்ற வான்வழி தாக்குதல் பற்றியோ, உயிரிழந்தோர் பற்றியோ பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப் பூர்வ தகவல் வெளியிடவில்லை.
வடக்கு வஜிரிஸ்தானில் சீன சுற்றுலாப் பயணி ஒருவர் செவ்வாய்க்கிழமை கடத்திச் செல்லப்பட்டதை தொடர்ந்தே, இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸார் கூறினர்.
பாகிஸ்தான் பழங்குடியினர் பகுதிகளில் ஒன்றான வஜிரிஸ் தான், உள்ளூர் தீவிரவாதிகள் மற்றும் அல் காய்தாவுடன் தொடர்புடைய வெளிநாட்டுத் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான இவர்களின் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்பகுதியில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தீவிரவாத அமைப்புகளுடன் சமாதானக் கொள்கையை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடைபிடித் தார். எனினும் அரசின் முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.
