Last Updated : 26 Apr, 2015 10:26 AM

 

Published : 26 Apr 2015 10:26 AM
Last Updated : 26 Apr 2015 10:26 AM

நேபாள பூகம்ப பலி 1,200 ஆக அதிகரிப்பு; 6,000 பேர் படுகாயம்

நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,200 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தியாவில் பிஹார், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இதில் 35 பேர் பலியாயினர்.

நேபாளத்தில் நேற்று காலை 11.41 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவானது. தலைநகர் காத்மாண்டில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உள்ள லாம்ஜங் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து 16 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.

காத்மாண்டு நகரில் உயரமான கட்டிடங்கள், பழங்கால கோயில்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் பாளம் பாளமாக பிளந்தன. வீடுகள் இடிந்து நொறுங்கின.

19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தரஹரா என்ற 9 மாடி கோபுரம் சரிந்து தரைமட்டமானது. வரலாற்றுச் சின்னமான அந்த கோபுரத்தில் சுமார் 180-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.

எவரெஸ்டில் பனிச்சரிவு

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்திலும் நிலநடுக்க பாதிப்பு இருந்தது. அங்குள்ள அடிவார முகாமில் கூடாரங்களில் தங்கியிருந்தவர்கள் நிலஅதிர்வை உணர்ந்து வெளியே தப்பிஓடினர். அப்போது பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

காத்மாண்டு விமான நிலைய ஓடுபாதை கடுமையாகச் சேதமடைந்திருப்பதால் அந்த விமான நிலையம் மூடப்பட்டது.

தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலியானோர் எண்ணிக்கை 1,200 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மருத்துவ மனைகள் நிரம்பி வழிவதால் தெருக்கள், சாலைகளில் வைத்தும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவுவதற்காக இந்தியத் தூதரகம் சார்பில் காத்மாண்டில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் இந்திய மருத்துவ குழுவினரும் நேபாளம் சென்றடைந்துள்ளனர். இதற்காக இந்தியாவுக்கு நேபாள அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாதிப்பு

இந்தியாவின் வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. பிஹாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிக அதிகபட்சமாக ரிக்டர் அலகில் 7.5 ஆக பதிவாகி உள்ளது என இந்திய புவியியல் பிரிவுத் தலைவர் ஜே.எல்.கவுதம் தெரிவித்தார்.

காத்மாண்டில் இருந்து 1100 கி.மீட்டர் தொலைவில் அமைந் துள்ள இந்திய தலைநகர் டெல்லி யில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. அங்கு மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

மேலும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.

பிஹாரில் 22 பேர் பலி

பிஹாரில் மட்டும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு பிஹார் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் தலைநகர் கொல்கத்தா உட்பட பல்வேறு இடங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வு இருந்தது. அந்த மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மால்டா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் கட்டிடம் இடிந்து 40 மாணவ, மாணவிகள் காயமடைந்துள்ளனர்.

சிக்கிம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின் மலைப் பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டன. எனினும், உயிரிழப்பு ஏற்பட்டதாகக் தகவல் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x