

வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் கலிதா ஜியாவுக்கு இரண்டு வழக்குகளில் நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. அரசியல் சார்பற்ற இடைக்கால அரசின் தலைமையில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில் கடந்த 3 மாதங்களில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பிஎன்பி தலைவர் கலிதா ஜியா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர் தலைநகர் டாக்காவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தங்கி போராட்டங்களை தீவிரப்படுத்தி வந்தார்.
பல்வேறு வழக்குகளில் அவர் ஆஜர் ஆகாததால் அவரை கைது செய்ய ஒரு மாதத்துக்கு முன்பு டாக்கா நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. அதன் பின்னரும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. பிஎன்பி தொண்டர்களின் பாதுகாப்பு வளையத்தால் போலீஸாரால் அவரை கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் நேற்று அவர் டாக்கா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது இரண்டு ஊழல் வழக்குகளில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறிய அவர் 92 நாட்களுக்குப் பிறகு தனது வீட்டுக்கு திரும்பினார்.