

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி மே 2-ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். வெளியுறவு அமைச்சரான பிறகு அவர் இலங்கை செல்வது இதுவே முதல்முறை.
இலங்கையில் ஒரு நாள் மட்டும் தங்கியிருக்கும் அவர், அந்நாட்டு அதிபர், பிரதமர் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். அவரது பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் அமைதி, அரசியல் நிலைத்தன்மை, வளர்ச்சி ஆகியவற்றுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச ஆட்சி காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டில் ஐ.நா. மனித உரிமை குழு மூலம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிறிசேனா அதிபரான பிறகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அங்கு செல்வது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கையில் இருந்து மே 3-ல் கிளம்பும் ஜான் கெர்ரி, அங்கிருந்து கென்யா செல்கிறார்.