

நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 3,700-ஐ தாண்டி உள்ளது. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
நேபாள உள்துறையின் தேசிய பேரிடர் மேலாண்மைப் பிரிவின் உயர் அதிகாரி ராமேஸ்வர் டங்கல் கூறும்போது, "நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 3,723 ஆக அதிகரித்துள்ளது. 6,500 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்திய தூதரக அதிகாரியின் மகள் உட்பட 5 இந்தியர்கள் நிலநடுக்கத்தில் பலியாகியுள்ளனர். காத்மாண்டுவில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால், நகரமே இருளில் மூழ்கியுள்ளது.
மழையும் தொடர்ந்து பெய்து வருவதால், மக்கள் தெருக்களில்கூட தஞ்சம் புக முடியாமல் தவிக்கின்றனர். இதனால் மீட்புப் பணிகளும் சுணக்கம் கண்டுள்ளன. மழையால் ஒரே ஆறுதல், தற்காலிக முகாம்கள் தண்ணீர் பற்றாக்குறை சற்றே குறைந்துள்ளது என்பதே.
நேபாளத்துக்கு உடனடியாக தற்காலிக கூடாரங்களும், அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் பெருமளவில் தேவைப்படுகின்றன.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வுகளால் மக்கள் பெருமளவில் பீதியடைந்துள்ளனர். விமான நிலையத்தில், வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல தவித்துக் கொண்டிருக்கிறனர். ஆனால், இப்போதைக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்றார்.