Published : 06 Apr 2015 10:25 AM
Last Updated : 06 Apr 2015 10:25 AM

ஒரு நட்சத்திரம் உதயமானது: சூரியனைவிட 8 மடங்கு பெரியது, 300 மடங்கு பிரகாசமானது

பூமியில் இருந்து 4200 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய நட்சத்திரம் உதயமாகி உள்ளது. இந்த நட்சத்திரம் சூரியனைவிட எட்டு மடங்கு பெரிதாகக் காணப்படுகிறது. மேலும் சூரியனைவிட 300 மடங்கு அதிகமாக பிரகாசிக்கிறது.

நட்சத்திரம் உதயமாவது எப்படி?

விண்வெளியில் ஹைட்ரஜன் வாயு உள்ளது. அந்த வாயு துகள்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பெரிய வாயு கூட்டமாக மாறுகின்றன. அவை பெரிய உருண்டையாக உருவெடுக்கிறது. அதன் மையப் பகுதி சூடேறி அணுச் சேர்க்கை நிகழ்கிறது. அப்போது ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன. இதன் விளைவாக பெரும் ஆற்றலும் ஒளியும் வெளிப்படு கிறது. இவ்வாறு ஒரு நட்சத்திரம் உருவாகிறது.

ஆனால் விண்வெளியில் புதிய நட்சத்திரங்கள் உருவாவதை காண்பது மிகவும் அரிது. அந்த அதிர்ஷ்டம் வானியல் விஞ்ஞானிகளுக்கு இப்போது கிடைத்துள்ளது.

18 ஆண்டுகளில் புதிய நட்சத்திரம்

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் கார்லஸ் காரஸோ கொன்சாலேஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் 1996-ம் ஆண்டில் ஒரு ஹைட்ரஜன் வாயுக் கூட்டம் ஒன்று சேருவதை கண்டுபிடித்தனர். அதனை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அந்த வாயு கூட்டம் கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று கலந்து இப்போது புதிய நட்சத்திரமாக உதயமாகியுள்ளது.

இந்த குழந்தை நட்சத்திரத்துக்கு விஞ்ஞானிகள் W75N(B)-VLA2 என்று பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 4200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. சூரியனைவிட எட்டு மடங்கு பெரிதாகக் காணப்படுகிறது. மேலும் சூரியனைவிட 300 மடங்கு அதிகமாகப் பிரகாசிக்கிறது.

இந்த நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன்மூலம் சூரிய குடும்பம் உட்பட விண்வெளியின் பல்வேறு ரகசியங்களை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x