

வட கொரிய அதிபரை வர்ணித்து எடுக்கப்பட்ட 'தி இன்டர்வியூ' படத்தின் டி.வி.டி-க்கள் கொண்ட பலூன்கள் நள்ளிரவில் பறக்கவிடப்பட்டதை கோழைத்தனமான செயல் என்று வட கொரியா கண்டித்துள்ளது.
'தி இன்டர்வியூ' திரைப்படத்தின் டி.வி.டி-க்கள் கொண்ட பலூன்கள் வட கொரிய எல்லையில் தென் கொரிய ஆர்வலர்களால் நேற்று (வியாழக்கிழமை) இரவு பறக்கவிடப்பட்டன. இதில் பல பலூன்கள் வட கொரிய வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இதனை கண்டித்துள்ள வட கொரியா, "தென் கொரியாவின் கோழைத்தனமான செயலை நாங்கள் முறியடித்து விட்டோம். இதன் மூலம் எங்களது மிரட்டலுக்கு அந்த நாடு பணிந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளது.
தென் கொரிய ஆர்வலர் லீ மின் போக் கூறும்போது, "ஜனவரி மாதம் முதல் ஆயிரக்கணக்கான டி.வி.டி-க்கள் கொண்ட பலூன்களை நாங்கள் அந்நாட்டுக்கு பறக்கவிட்டுள்ளோம். அனைத்து முயற்சிகளையும் நாங்கள் முன் அறிவிப்பில்லாமல் நள்ளிரவு நேரங்களிலேயே மேற்கொண்டோம். ஆனால் எங்களது செயலை யாரும் தடுத்து நிறுத்தவில்லை" என்றார்.