Last Updated : 27 Apr, 2015 07:50 AM

 

Published : 27 Apr 2015 07:50 AM
Last Updated : 27 Apr 2015 07:50 AM

பாக்.கில் மனித உரிமை ஆர்வலர் கொலை: விசாரணைக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவு

பாகிஸ்தானில் ஷபீன் மஹ்மூத் என்ற மனித உரிமைகள் ஆர்வலர் மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

கராச்சியில் ‘இரண்டாவது தளம்’ என்ற பெயரில் அமைப்பை நடத்தி வரும் ஷபீன், மனித உரிமைகள் தொடர்பாக விவாதங்கள், கருத் தரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சி கள் நடத்தி வருகிறார்.இவர் கடந்த வெள்ளிக்கிழமை கலவர பூமியாகத் திகழும் பலுசிஸ்தானில் நடை பெறும் தவறுகள் குறித்து கருத் தரங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.

கருத்தரங்கம் முடிந்ததும் ஹோட்டலில் இருந்து காரில் தனது தாயாருடன் அவர் புறப்பட்டார். போக்குவரத்து சிக்னல் ஒன்றில் காரை நிறுத்தியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் சுட்டதில் ஷபீன் உயிரிழந்தார். அவரது தாயார் பலத்த காயம் அடைந்தார்.

பலுசிஸ்தான் மனித உரிமைகள் ஆர்வலர் மமா அப்துல் காதிர் இதுபற்றி கூறும்போது, “இந்த கருத்தரங்குக்கு முன்னால் ஷபீனுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதற்கு முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மிரட்டல்கள் வந்தன. பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பற்றி பேசுவது கடின மாக உள்ளது.

எனக்கும் தொடர்ந்து போனில் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அரசு அமைப்புகள் என்னை தொடர்புகொண்டு, இத்தகைய கருத்தரங்குகளில் பங்கேற்க வேண்டாம் என நிர்பந்திக்கின்றன. மனித உரிமைகள் பற்றி பேசினால் துரோகிகளாக பார்க்கிறார்கள்” என்றார். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

பலுசிஸ்தானில் தீவிரவாதத்தில் ஆர்வம் இல்லாத பிரிவினைவாதிகள், மாணவர்கள், கல்வியாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் ஏதாவது குற்றம் சாட்டி கொடுமைப்படுத்தி கொல்கின்றனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் குறை சொல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x