

நேபாளத்தை உலுக்கிய மிகப்பெரிய பூகம்பத்தில் தலைநகர் காத்மாண்டில் தரைமட்டமான 7 மாடிக் கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளிலிருந்து 5 நாட்களுக்குப் பிறகு இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
பெம்பா தமங் (18) என்ற அந்த இளைஞரை வெளியில் கொண்டு வந்த போது அவர் முகம் முழுதும் தூசியினால் மறைக்கப்பட்டிருந்தது. சூரிய வெளிச்சத்தைக் கண்டவுடன் அவரது கண்கள் திறந்து மூடின.
அமெரிக்க பேரிடர் மீட்புக்குழுவின் உதவியுடன் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பெம்பா தமங் மீட்கப்பட்டுள்ளார்.
இடிபாடுகளுக்கு இடையே பாஸ்னெட் என்ற போலீஸ் தவழ்ந்து உள்நுழைந்து தமங்கை மீட்டுள்ளார்.
“நான் அவரை நெருங்கும் போது, முதலில் எனக்கு நன்றி தெரிவித்தார், அவர் தனது பெயர், முகவரியை என்னிடம் தெரிவித்தார். நான் அவருக்கு குடிக்க நீர் அளித்தேன். அவரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவருக்கு உறுதி அளித்தேன்.
கட்டிடம் இடிந்து அவர் மேல் விழுந்தாலும் அவர் ஆழத்திற்குச் செல்லவில்லை.
இந்த மீட்பில் ஆபத்துகள் இருந்தாலும் தவிக்கும் மனித உயிர் ஒன்றைக் காப்பாற்றுவதில் எந்த வித இடர்பாட்டையும் எதிர்கொண்டு மீள்வோம் என்று மீட்புக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
5 நாட்கள் அவர் எப்படி உயிருடன் இருந்தார் என்று பாஸ்னெட்டிடம் கேட்ட போது, “நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே” என்றார்.