இந்திய அரசு இணையதளங்களை குறிவைத்த சீன ஹேக்கர்கள்

இந்திய அரசு இணையதளங்களை குறிவைத்த சீன ஹேக்கர்கள்
Updated on
1 min read

இந்திய அரசு மற்றும் வர்த்தகம் சார்ந்த இணையதளங்களை சீன ஹேக்கர்கள் குறிவைத்து ஊடுருவியதாக இணைய பாதுகாப்பு நிறுவனமான 'ஃபயர் ஐ' தெரிவித்துள்ளது.

2005-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள், அரசியல், பொருளாதாரம், ராணுவ தகவல்கள் என பல தகவல்கள் உள்ளடக்கிய முக்கிய இணையதளங்களில் சீன ஹேக்கர்கள் ஊடுருவியதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை குறிவைத்து மட்டும் சீன ஹேக்கர்கள் ஊடுருவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் ஆசிய பசபிக் நாடுகளுக்கான அதிகாரி ப்ரைஸ் போலாண்ட் கூறும்போது, "இந்த அத்துமீறல் இன்னும் நடந்து வருகிறது.

எங்களது வாடிக்கையாளர்கள் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவற்றை நாங்கள் கண்காணிக்க நேர்ந்தது. அதிலிருந்து ஹேக்கர்கள் எத்தகைய அளவில் செயல்படுகின்றனர் என்பதை அறிய முடியவில்லை.

ஆனால், அவர்களது ஊடுருவல் அனைத்தும் அரசுக்கு தொடர்புடையதாகவும் தெற்கு ஆசிய பிராந்தியத்தை உள்ளடக்கியும் இருந்தது. அத்துடன் கார்ப்ரேட் நிறுவனங்களும் பத்திரிகையாளர்களும் இந்த ஊடுருவலுக்கு இலக்காகினர்.

அரசு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களை கண்காணிக்கவே சீன நிறுவனங்கள் பல இணையத்தை பயன்படுத்துகின்றனர். எங்களது கண்காணிப்பைத் தொடர்ந்து, இது குறித்து நாங்கள் கேட்ட விளக்கத்துக்கு சீன இணைய நெறிமுறையாளர்கள் இதுவரையிலும் பதில் அளிக்கவில்லை.

இந்த ஊடுருவல் முயற்சியில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என்றாலும், இதன் விளைவுகள் நீண்ட கால அடிப்படையில் வெளிவர அல்லது வெளிப்படக் கூடியதாக இருக்கும்" என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in