

இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடிக்க இந்தியர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அத்துமீறி நுழையும் இந்தியப் படகுகளை சிறைபிடிக்குமாறு கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்க்கட்சியான தேசிய சுதந்திர முன்னணி ஆளும் கட்சி மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தது. அதாவது, இந்தியாவுடனான நட்புறவை பேணுவதற்காக இலங்கை அரசு வளைந்து கொடுத்து, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலில் மீன் பிடிக்க அனுமதி அளித்துள்ளது என பிரதான எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.
இந்நிலையில், நேற்றிரவு (வியாழக்கிழமை) தலைநகர் கொழும்புவில் மீனவ தொழிற்சங்க பிரதிநிகளை சந்தித்துப் பேசிய அதிபர் சிறிசேனா, "இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடிக்க இந்தியர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அத்துமீறி நுழையும் இந்தியப் படகுகளை சிறைபிடிக்குமாறு கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடித்தலை நிறுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா சென்றபோது இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். இருநாட்டு நல்லுறவிலும் பாதிப்பு ஏற்படாமல், யாருடைய மனதும் புண்படாமல் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எனது எண்ணம். இப்பிரச்சினையில் இலங்கையில் வடக்கு மாகாண கவுன்சிலும் தலையிட வேண்டும் என விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் கோரிக்கை:
இருநாட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இலங்கை–இந்திய மீனவப் பிரதிநிதிகள் இடையேயான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24–ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
அப்போது, பாக் நீரிணை பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லை பாரபட்சம் இன்றி இரு தரப்பினரும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய மீன்பிடி உரிமையை வழங்க வேண்டும், மீன்பிடி காலங்களில் ஆண்டுக்கு 83 நாட்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை தமிழக மீனவப் பிரதிநிதிகள் வற்புறுத்தினார்கள் என்பது கவனிக்கத்தக்கது.