லிட்டில் இந்தியா கலவர வழக்கு: 25-வது நபரின் விசாரணை தொடக்கம்

லிட்டில் இந்தியா கலவர வழக்கு: 25-வது நபரின் விசாரணை தொடக்கம்
Updated on
1 min read

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கலவரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 25 இந்தியர்களில், 25-வது நபரான அருண் கலியமூர்த்தி (29) மீதான வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.

கலவரம் நடைபெற்ற பகுதியிலிருந்து அனைவரையும் கலைந்து செல்ல காவல்துறை உத்தரவிட்டும் அந்த உத்தரவை அருண் மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், அருண் தரப்பு இதனை மறுத்துள்ளது. தவறான நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியா கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 25 இந்தியர்களில் 24 நபர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

அருணின் மொபைல் போனில், கலவரத்தின்போது வாகனங்கள் எரிவது, கலவரக்காரர்கள் கூச்சலிடுவது உள்ளிட்ட காட்சிகள் வீடியோவாக பதிவாகியிருந்தது, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கூட்டத்தைக் கலைந்து செல்ல காவல்துறை உத்தரவிடுவது வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது.

அருண் தரப்பில், அருண் தவறாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இனப்பாகுபாடு அடிப்படையில் அவர் குறிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அருண் வேலை தேடிய போது, லிட்டில் இந்தியா பகுதியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

இனப் பாகுபாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் அவரைக் குறிவைத்து கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த வெகு நேரத்துக்குப் பிறகு, அந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் நின்றிந்த அருண், அவர் இந்தியர் என்பதால்மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்” என அருண் தரப்பு வழக்கறிஞர் சசி நாதன் வாதிட்டதாக, `ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் செல்லகுமரன் செல்லமுத்து, “கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர சிறப்பு நடவடிக்கை பிரிவு உத்தரவிட்டும் அங்கிருந்து கலைந்து சென்றாரா இல்லையா என்பதுதான் பிரச்சினை” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in