

ஆர்மீனிய இனப் படுகொலையின் 100-வது ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆர்மீனிய தலைநகர் யெரவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் ஹோலந்த், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேற்கு ஆசிய பகுதியில் ஆர்மீனியா நாடு உள்ளது. அதன் மேற்கில் துருக்கி, வடக்கில் ஜார்ஜியா, கிழக்கில் அஜர்பை ஜான், தெற்கில் ஈரான் ஆகிய நாடு கள் அமைந்துள்ளன. முதலாம் உலகப்போரின் போது துருக்கியை ஆண்ட ஒட்டோமன் பேரரசர்களின் கட்டுப்பாட்டில் ஆர்மீனியா இருந்தது.
ஆர்மீனியா பகுதியில் கிறிஸ் தவர்கள் பெரும்பான்மையாக வசித்தனர். இதனால் ஒட்டோமன் அரசுக்கும் ஆர்மீனிய சமுதாயத் தலைவர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
கடந்த 1915 ஏப்ரல் 24-ம் தேதி ஆர்மீனிய பல்துறை அறிஞர்கள் 250 பேரை படை வீரர்கள் கொடூரமாக கொலை செய்தனர். அதைத் தொடர்ந்து சுமார் 15 லட்சம் ஆர்மீனிய மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை இப்போதைய துருக்கி அரசு மறுத்து வருகிறது. ஓட்டோமன் படைக்கும் ஆர்மீனிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம், இதனை இனப் படுகொலை என்று கூறு வதை ஏற்க முடியாது என்று துருக்கி அரசு கூறுகிறது.
அண்மையில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப்பாண்டவர், 1915-ல் ஆர்மீனிய மக்கள் கொல்லப்பட்டது திட்டமிட்ட இனப் படுகொலை என்று கூறினார். இதற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் ஆர்மீனிய இனப் படுகொலையின் 100-வது ஆண்டு நினைவுதினம் ஆர்மீனிய நாட்டின் தலைநகர் யெரவனில் நேற்று நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அந்த நாட்டு அதிபர் செர்க் சர்கிஸ்சியன் தலைமை வகித்தார். பிரான்ஸ் அதிபர் ஹோலந்த், ரஷ்ய அதிபர் புதின் உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதுகுறித்து ஆர்மீனிய அதிபர் செர்க் சர்கிஸ்சியன் கூறியபோது, 1915 சம்பவத்தை துருக்கி அரசு இனப்படுகொலை என்று ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் நல்லிணக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார்.
ஆனால் துருக்கி ஆட்சி யாளர்கள் இதனை ஏற்க மறுத்துள்ளனர்.