

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதை ஹிலாரி கிளின்டன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான ஹிலாரி கிளின்டன் ஜனநாயக கட்சியின் சார்பில் 2016-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
பல மாதங்களாக இதற்கான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இதனை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் ஹிலாரி அறிவித்துக் கொண்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையை ஹாலாரி பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "உங்களது வாக்குகளை பெறுவதற்காக நான் களத்தில் இறங்குகிறேன். ஒவ்வொரு நாளுமே அமெரிக்கர்கள் சாம்பியனையே விரும்புவர். நான் அந்த சாம்பியனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார்.
ஹிலாரியின் இந்த அறிவிப்பு ட்விட்டரில் வெளியானதும் அதற்கு அமோக ஆதரவு குவிந்தது.
முன்னதாக இந்த அறிவிப்புக்கு முந்தைய நாள் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, "ஹிலாரி கிளின்டன் அமெரிக்காவின் மிகச் சிறந்த அதிபராக இருக்க முடியும். 2008-ஆம் வேட்பாளராக களம் இறங்கிய எனக்கு வல்லமைமிக்க உறுதுணையாக அவர் விளங்கினார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரர் ஜான் ஜெப் புஷ் நிற்க உள்ளார்.