

தன்னுடைய பெயரில் ஏற்படுத்தப்பட்ட கல்வி உதவித் தொகையை மெல்போர்ன் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் இந்திய மாணவர் ஒருவருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
மெல்போர்ன் லா ட்ரோப் பல்கலைக் கழகம் 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே, இந்தியாவுடன் வலுவான உறவைப் பேணி வருகிறது அந்தப் பல்கலைக்கழகம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்டோர் வருகை தந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் இப்போது 1,100-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயில்கின்றனர்.
இந்தப் பல்கலைக்கழகம் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து கல்விச் சேவை புரிய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அமிதாப் பெயரில் கல்வி உதவித் தொகைத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. ஊடகம், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகிய துறைகளில் ஆய்வு மேற்கொள்ளும் இந்திய மாணவர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிதியுதவி வழங்கப்படும்.
இந்தத் திட்டம் பற்றி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜான் தீவார் கூறுகையில், "அமிதாப் பச்சன் எங்களுடன் இணைந்து கல்விப் பணியாற்ற முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு தங்கள் ஆய்வுகள் மூலம் தீர்வு காண விரும்பும் மாணவர்களின் கல்விக்கு உதவ முடியும். இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இன்னும் ஏராளமான மாணவர்களை இந்தியாவிலிருந்து எதிர்பார்க்கிறோம்" என்றார்.