

செர்பியா நாட்டில் உள்ள நிஸ் எனும் நகரத்தில் ஸாஸா பெஸிக் எனும் நபர், சுமார் 450 தெரு நாய்களைப் பராமரித்து வருகிறார். அவர் தற்போது வசித்து வரும் இடத்தை, அந்த நகராட்சி, திடீரென உரிமை கொண்டாடுவதால், அந்தத் தெரு நாய்களுடன் பெஸிக்கும் வேறு இடத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விலங்கு நல உரிமைச் செயற்பாட்டாளர்கள் அந்நகராட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நிஸ் பகுதியில் வசித்து அருபவர் ஸாஸா பெஸிக் (45). இவருடைய வீட்டுக்குக் கடந்த 2008ம் ஆண்டு நான்கு தெரு நாய்க் குட்டிகள் வந்து சேர்ந்தன. அவற்றின் மீது இரக்கம் கொண்ட அவர், அவற்றை வளர்க்கத் தொடங்கினார். நாளடைவில் ஊரில் உள்ள தெரு நாய்களை எல்லாம் அவர் பராமரிக்கத் தொடங்கினார்.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில் நாய்களின் எண்ணிக்கை 60-ஐ தொட, அவர் தற்போது இருக்கும் இடத்துக்கு வந்து சேர வேண்டியதாயிற்று. தற்சமயம் சுமார் 450 தெரு நாய்களை அவர் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தற்போது இருக்கும் இடத்தை நிஸ் நகராட்சி சொந்தம் கொண்டாடத் தொடங்கியுள்ளது. எனவே, பெஸிக் மற்றும் அவரது நாய்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று அழுத்தம் தர ஆரம்பித்துள்ளது. இதனை அறிந்த விலங்கு நல உரிமைச் செயற்பாட்டாளர்கள் அரசை எதிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து பெஸிக் கூறிய தாவது: இந்த நாய்கள் எல்லாம் பகலில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும். இரவில்தான் அவற்றை கூண்டுக்குள் அடைப்போம். என்னுடன் மேலும் ஆறு பேர் இந்த நாய்களைப் பராமரித்து வருகிறோம். இவற்றுக்கு ஒரு வேளை உணவு கிடைக்கச் செய்வதே பெரும் போராட்டமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 5 ஆயிரம் அல்லது 6 ஆயிரம் யூரோக்கள் (சுமார் ரூ. 40 லட்சம்) தேவைப்படுகிறது. வ
ெளிநாடுகளில் இருந்தும், உள்ளூரில் உள்ள சிலரும் உதவி செய்வதால் ஏதோ ஓரளவு நிலைமையைச் சமாளிக்க முடிகிறது. நாங்கள் பராமரிக்கும் நாய்களுக்கு தடுப்பூசி போடுவ தோடு, கருத்தடையும் செய்துள் ளோம். அவை காணாமல் போய் விட்டால் அவற்றைக் கண்டுபிடிப் பதற்கு அவற்றின் உடலில் மைக்ரோசிப்பையும் பொருத்தி யுள்ளோம்.
எங்களின் சொந்த வாழ்க்கையைக் கூட நினைத்துப் பார்க்க நேரமில்லாமல் இவற்றைப் பராமரித்து வருகிறோம். சில நல்ல உள்ளங்களால் இதுவரை 250 தெரு நாய்கள் வீடுகளில் வளர்ப்புப் பிராணிகளாக மாறியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
செர்பியாவில் 2 லட்சத்து 80 ஆயிரம் நாய்கள் பதிவு செய்யப்பட்டு வளர்ப்புப் பிராணி களாக வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் தெரு நாய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அறிவது இயலாத காரியம் என்று அந்நாட்டின் கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.